யார் இந்த பாத்திமா பீவி.? கருணாநிதி கைது சம்பவத்தின் போது மவுனம் காத்தாரா.? ஆளுநர் பதவியில் நீக்க காரணம் என்ன?
உச்ச நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின் பாத்திமா பீவி தமிழக ஆளுநராக செயல்பட்டு வந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கும் இவருக்கும் இடைய கடும் மோதல் ஏற்பட்டது. 2001ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கருணாநிதி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி ஆளுநராக இருந்த பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்ப பெற்றது.
யார் இந்த பாத்திமா பீவி ?
கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி, கேரள மாநிலத்தில் நீதிபதியாகப் பணியாற்ற பின் 1989-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணி புரிந்தார். 1996ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கும் பணி நடைபெற்றது.
கருணாநிதி - பாத்திமா பீவி மோதல்
கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் பாத்திமா பீவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் இருவருக்கும் இடையே எந்த வித மோதல் போக்கும் ஏற்பட்டவில்லை. அரசு மற்றும் ஆளுநர் மாளிகை இடையே சுமுகமான உறவு நீடித்தது. இந்தநிலையில் மதுரை பல்கலைக்கழகத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த சாலிஹு என்பவரை துனைவேந்தராக நியமித்தார். இதற்கு கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மதுரை பல்கலைக்கழகத்தில் தொடர்பு இல்லாத ஒருத்தரை நியமிக்கப்பட்டதாக பிரச்சனை உருவானது.
நள்ளிரவில் கருணாநிதி கைது
இதனையடுத்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் தறையில் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது.இதற்கு செனட் கூட்டத்திலும் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் புதிய துறை தொடங்கும் முடிவிற்கு ஆளுநராக இருந்த பாத்திமா பீவி மறுப்பு தெரிவித்தார். இதனால் இரண்டு தரப்புக்கும் மோதல் அதிகரித்தது. இதனையடுத்து 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டிஆர் பாலு ஆகியோரும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
ஆளுநர் பதவியில் இருந்து நீக்கம்
இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலை ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆளுநராக இருந்த பாத்திமா பீவி மத்திய அரசுக்கு உரிய முறையில் அறிக்கை அளிக்கவில்லையென கூறப்பட்டது. இதனையடுத்து தமிழக ஆளுநர் பதவியில் இருந்து பாத்திமா பீவியை மத்திய அரசு நீக்கியது. கேரள நீதிமன்ற நீதிபதியாவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய பாத்திமா பீவி, தமிழக ஆளுநராக செயல்பட்ட காலத்தில் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
Breaking news : தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்