ஏகாதிபத்திய எதிர்ப்பு முதல் சாதி மறுப்பு வரை: தொழிலாளர்களின் உற்ற தோழர் சங்கரய்யா!
சுதந்திர போராட்ட தியாகியும், முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102
போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் சங்கரய்யா. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோதுதான் சங்கரய்யாவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். உழைப்பாளர்களின் உற்ற தோழனாக நின்று பல போராட்டங்களை முன்னெடுத்த தோழர் சங்கரய்யா, பொதுவாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் தனது இறுதி மூச்சு வரை கம்யூனிசக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புடன் இருந்தார்.
1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி பிறந்த சங்கரய்யா மாணவ பருவத்திலேயே இடதுசாரி இயக்கங்கள் மீது கொண்ட ஈர்ப்பால், 1940களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மதுரை மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயலாளராக நியமிக்கப்பட்ட சங்கரய்யா, மாணவர் சங்கம் மூலம் மாணவர்களை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்றார். இதனிடையே, தன்னை கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைத்துக் கொண்டார்.
சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்து விடுதலை வேட்கையை தூண்டியதன் விளைவாக, இறுதியாண்டு பரீட்சைக்கு 15 நாட்கள் முன்பாக சிறையில் அடைக்கப்பட்டார் சங்கரய்யா. 18 மாதங்கள் சிறையில் கழித்துவிட்டு வெளியே வந்தவர் அடுத்தடுத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்குணத்துடன் போரடியதால் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார் சங்கரய்யா. சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நின்றதால் சிறை சென்ற சங்கரய்யா, தலைமறைவாக இருந்தபடியே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தார்.
1964ஆம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து சிலர் வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். அதில் சங்கரய்யாவும் ஒருவர். 1967ஆம் ஆண்டில் மதுரை மேற்கு தொகுதி, 1977 மற்றும் 1980இல் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை, தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார். ஜனசக்தி இதழின் முதல் பொறுப்பாசிரியரும், தீக்கதிர் இதழின் முதல் ஆசிரியரும் சங்கரய்யாதான். அந்த சமயத்தில் பொதுவுடைமைச் சித்தாந்தங்களைத் தனது எழுத்தின் மூலம் மக்களிடம் சென்றடையச் செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் மிகுன் த நட்புறவோடு இருந்தவர் சங்கரய்யா. அவரது கோரிக்கைகளுக்கு அன்றைய முதல்வர்கள் செவி சாய்க்கும் வகையில் அவர் மீது மிகுந்த மரியாதை இருந்தது. சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களைக் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தார் சங்கரய்யா. தனது பொதுவாழ்வில் ஏராளமான சீர்த்திருத்த திருமணங்களை நடத்திவைத்தவர் சங்கரய்யா, தன் குடும்பத்திலும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி முன்னுதாரணமாக இருந்துள்ளார்.
தனது 95ஆவது வயதிலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராட்டக் களம் கண்டவர் சங்கரய்யா. சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது, காதலை அங்கீகரிக்க சொல்லி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சங்கரய்யா.
வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு என்று சட்டமன்றத்தில் முழங்கிய சங்கரய்யா உழைப்பாளர்களின் உற்ற தோழராக இருந்தார். அவர்களுக்கான முதல் ஆதரவு குரல் சங்கரய்யாவினுடையதாகத்தான் இருக்கும். எளிய மக்களின் குரலாக போராட்டக் குணத்துடன் இருந்த சங்கரய்யா கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன் தினம், சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவரது உயிர் இம்மண்ணுலகை விட்டு பிரிந்துள்ளது.
போய் வாருங்கள் தோழர் சங்கரய்யா... உங்களுக்கு செவ்வணக்கம்..!