நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகளை மூடுவதற்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் பார்களை அகற்றக் கோரி சண்டிகரைச் சேர்ந்த ஹர்மான் சித்து  என்பவர் முதன்முதலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதித்தது. 

ஆனாலும், இதை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதைத் தொடர்ந்து மேலும்  பல வழக்குகளும்  வந்தன. 

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றங்களின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. 

அதன்படி,  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்பது உத்தரவு.

இதன் எதிரொலியாக தமிழத்தில் 3,321 மதுக்கடைகளும், ஒடிசாவில் 1,167 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இப்படி படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு  வருகின்றன.

இந்த புகழ் பெற்ற வழக்கின் நாயகனான ஹர்மான் சித்து, வாகன விபத்து ஒன்றில் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.

தமக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாலும், அதன் காரணமாக விபத்து ஏற்படவில்லை என்றார். மேலும், மதுவால் ஏற்படும் வாகன விபத்தை தடுக்கவே தாம் போராடியதாகவும் குறிப்பிட்டார்.

அதேசமயம், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கே முக்கிய காரணம் என்று பாமக உரிமை கோருகிறது.

பாமக வின் பல ஆண்டுகால போராட்டத்தை ஊடகங்கள் புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்துகின்றன என்றும் அக்கட்சி குற்றம் சாட்டுகிறது.

உண்மையில், உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவுக்கு யார் காரணமாக இருந்தாலும் பாராட்டுக்கு உரியவர்களே.

ஆனாலும், ஹர்மான் சித்துக்கு முன்பே பாமக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தால், அதை ஆதாரத்துடன் ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் தயக்கம் காட்டுவது ஏன்?

ஹர்மான் சித்து சண்டிகார் உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்தார். அதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், உச்சநீதி மன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதில் பாமக வழக்கறிஞர் பாலு, எப்போது எந்த இடத்தில் சம்பந்தப் பட்டுள்ளார் என்று, அந்தக் கட்சி தாராளமாக தெரிவிக்கலாமே. அதில் என்ன தயக்கம்?