மணல் மாபியா கேசர் தெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர்தான் என்றும் இந்த விபரம் தெரியாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் உளரிக்கொட்டுகிறார் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், மணல் மாபியா சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் ஓபிஎஸ் என்றும், தமிழக அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை நியமனம் செய்ததும் ஓபிஎஸ்தான் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் புகைப் படங்களில் ஓபிஎஸ்ம், சேகர் ரெட்டியும் அசோகனும், நம்பியாரும்போல் உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் அமைச்சராகவே இல்லாத நிலையில் சேகர் ரெட்டியை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று  அவருக்கு தெரியாது என கூறினார்.

சி.வி.சண்முகத்துக்கு முழு விபரம் வேண்டும் என்றால் தற்போது அமைச்சராக இருக்கும் விஜய பாஸ்கரையும், முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியையும் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சேகர்  ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர்தான் என உறுதிபடத் தெரிவித்தார்.