இப்படிப் பேச யார் உரிமை கொடுத்தது? செய்தியாளர் சந்திப்பில் கண் கலங்கிய குஷ்பு!!
37 ஆண்டுகளில் நான் இவ்வளவு கோபமாக பேசியதில்லை. இனி நான் சும்மா இருக்கமாட்டேன். என்னை சீண்டினால், அதன் விளைவுகளை தாங்கமுடியாது என்று குஷ்பு எச்சரித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அவதூறாகப் பேசியதுடன் குஷ்பு பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசினார். பல பெண்கள் கூடி இருந்த பொதுக்கூட்டத்தில் அவரது இந்தப் பேச்சு பலரையும் முகம் சுழிக்க வைத்தது.
இந்நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குஷ்பு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய குஷ்பு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கினார்.
"பெண்களைப் பற்றி அவதூறாக பேச யார் அதிகாரம் கொடுத்தது? கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை. இது ஸ்டாலின் தலைமையில் இருக்கும் புது திராவிட மாடல் திமுக. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து கருணாநிதியைதான் அசிங்கப்படுத்துகிறார்கள். அதையும் நான்கு பேர் உட்கார்ந்து ரசிக்கிறார்கள். இதைச் சொல்வதால் நாளைக்கே என் வீட்டின் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினாலும் எனக்குக் கவலை இல்லை" என்றார்.
பெண்களை அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
"பெண்களை இழிவாகப் பேசும் ஆண்கள், அந்தப் பெண்களை ஒரு மகளாகவோ, மருமகளாகவோ, தாயாகவோ பார்ப்பதில்லை. நான் எனக்காகப் பேசவில்லை. அனைத்து பெண்களுக்காகவும் பேசுகிறேன்." என்ற அவர், பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வராத வகையில், திருப்பி அடிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். "யாரை நம்பியும் நான் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. நான் என் திறமையை நம்பி வந்துள்ளேன்" என்ற குஷ்பு, இப்படிப்பட்ட ஆண்களை முட்டிக்கு முட்டி தட்டினால்தான் புத்தி வரும் என்றும் கோபத்துடன் கூறினார்.
தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து விசாரணை நடத்த உள்ளது என்றும் குஷ்பு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "உங்கள் வீட்டுப் பெண்களை இப்படி பேசுவீர்களா? உங்கள் பாணியிலேயே என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது என் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்கு சமம். என் வளர்ப்பை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை." என்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி திராவடி மாடல் அரசு என்று கூறிவரும் நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் கேள்வி எழுப்பிய குஷ்பு, "இதுபோன்ற செயல்கள் சரியா? இதுதான் திராவிட மாடலா? என் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல்தான் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். இவர்களை எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால்தான் புத்தி வரும். இன்று இருக்கும் திமுகவில் இப்படிப்பட்ட ஆட்களைத்தான் தீனி போட்டு வளர்க்கிறார்கள்" என்று சாடினார்.
கோவையில் கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை... ரூ.30 லட்சம் அபேஸ் செய்தவர் கைது!
"நான் தமிழ்நாட்டுக்கு வந்த 37 ஆண்டுகளில் நான் இவ்வளவு கோபமாக பேசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இனி நான் சும்மா இருக்கப்போவதில்லை. என்னை சீண்டி பார்க்காதீர்கள். அப்படி சீண்டினால், தாங்க மாட்டீர்கள்" என்றும் குஷ்பு எச்சரிக்கை விடுத்தார். குஷ்புவின் இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின் திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள குஷ்பு, இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருக்கிறார்.
கட்சியில் இருந்த நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குரங்குக்கு போதை ஏற்றி சங்கிலியால் கட்டி வைத்து... இன்ஸ்டாகிராமில் அம்பலமான நைட் கிளப் பயங்கரம்!