பெண்களை அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
பெண்களை அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பெண்களை அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை அவதூறாகப் பேசியது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அவதூறாகப் பேசியதுடன் குஷ்பு பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசினார். பல பெண்கள் கூடி இருந்த பொதுக்கூட்டத்தில் அவரது இந்தப் பேச்சு பலரையும் முகம் சுழிக்க வைத்தது.
அந்தப் பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு குறித்து நடிகை குஷ்பு காட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்திய அவர், பெண்களை இழிவாக பேச திமுகவினருக்கு யார் உரிமை கொடுத்தது? எனக் கேள்வி எழுப்பினார். பெண்களை அவதூறாகப் பேசும் இவரைப் போன்றவர்களை திமுக ஆதரித்த வளர்ப்பதாகவும் குற்றம்சாட்டிய குஷ்பு, அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போதே மன் உடைந்து கண்ணீர் மல்கிய நிலையில் பேசிய குஷ்பு, "நான் எனக்கு மட்டும் பேசவில்லை. ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் பேசுகிறேன். என் மகள்களுக்கு நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" எனவும் கூறினார். மேலும், இதுவரை திமுக சார்பில் முதல்வரோ வேறு யாருமோ தங்கள் கட்சி பேச்சாளரின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார். குறிப்பாக, மீண்டும் கட்சியில் சேர முடியாத வகையில் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு கண்டபடி பேசிவரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இதற்கு முன் விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் அவதூறாகப் பேசியதால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.