மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதியை ஒதுக்கியதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533.59 கோடி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533.59 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு மற்ற மொழிகளுக்கு மிக குறைவான தொகையே ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது 5 இந்திய செம்மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு 10 ஆண்டுகளில் ரூ.147.56 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. இந்த 5 மொழிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

போலிப் பாசம் தமிழுக்கு

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, தமிழ் உள்ளிட்ட 5 மாநில மொழிகளுக்கு ரூ.147.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை விட 17 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என தெரிவித்துள்ளார்.

திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது

இந்நிலையில் அரைத்த மாவையே நீங்கள் மீண்டும் மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே என அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம். திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

யார் உங்களைத் தடுத்தார்கள்?

அரைத்த மாவையே நீங்கள் மீண்டும் மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே. தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக? யார் உங்களைத் தடுத்தார்கள்?

தமிழுக்கு ரூ.75 கோடி ஒதுக்கியபோது எங்கு சென்றீர்கள்?

நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 - 2014, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.675.36 கோடி. தமிழுக்கு வெறும் ரூ.75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்? கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.