நிச்சயம் பண்ணியாச்சு, கல்யாணம் எப்போ? கனிமொழி என்.வி.என் சோமு கலாய்!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, மசோதா எப்போது சட்டமாகும் என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடந்து வருகிறது. அந்த வகையில், மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மசோதாவை ஆதரித்து பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டதோடு, பாஜக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்ததன் உள்நோக்கத்தை கேள்வி எழுப்பினார்.
பெண்கள் மீதான அக்கறை பாஜகவுக்கு உண்மையாகவே இருந்தால் உடனே இந்த மசோதாவை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது அமல்படுத்தப்படும்? சட்டமாகும்? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சரிநிச்சயம் பண்ணியாச்சு, கல்யாணம் எப்போ?” என்ற கேள்வியோடு தனது உரையை நிறைவு செய்ததாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் முதல்முறையாக 1996ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. அப்போதெல்லாம் மசோதா நிறைவேறவில்லை. முதல்முறையாக இந்த மசோதா மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை.
நீட் விவகாரம்: பெர்சண்டேஜ், பெர்சண்டைல் என்ன வித்தியாசம்?
இந்த பின்னணியில் இந்த மசோதாவை தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றை அமல்படுத்திய பிறகே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலுக்கு வரும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மசோதா நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகும் எனவும், தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.