நீட் விவகாரம்: பெர்சண்டேஜ், பெர்சண்டைல் என்ன வித்தியாசம்?
நீட் முதுநிலை தேர்வில் பூஜ்ஜியம் பெர்சண்டைல் விவகாரம் பேசுபொருளாகி உள்ள நிலையில், பெர்சண்டேஜ், பெர்சண்டைல் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் பற்றி தெரிந்து கொள்வோம்
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் போன்ற முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் அல்லது அதற்கு குறைவாக நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
தன்மானத்தை விட்டு அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை - அண்ணாமலை அதிரடி
மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெர்சண்டைல் பற்றி சுட்டிக்காட்டப்படுகிறது. இது பெர்சண்டேஜ் தானே என சிலர் வினவுகின்றனர். ஆனால், பெர்சண்டேஜ்ஜுக்கும், பெர்சண்டைலுக்கும் வித்தியாசம் உள்ளது.
இதுகுறித்து மருத்துவரும், எழுத்தாளருமான சென்பாலன் தனது எக்ஸ் பக்கத்தில், பெர்சண்டேஜ், பெர்சண்டைல் இரண்டுமே பார்க்க ஒன்றுபோலத்தான் இருக்கும். ஆனால், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
“பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான்.” என விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது என அவர் கூறியுள்ளார். உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள் = 89,90,90,91, 92, 96,98,98,99 என வைத்துக் கொள்வோம். இதில் 50ஆவது பெர்சண்டைல் = 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 92க்கு கீழ் பெற்றுள்ளனர். 50th percentile = 92.
இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள் = 18,22,34,35, 36, 40,41,41,42 என இருக்கிறது. இப்போது, 50th percentile = 36. அதாவது 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50 சதவீத மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர் என்று பெருள்படும்.
நீட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு என சுட்டிக்காட்டும் சென் பாலன், “ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகட்டிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே, ஜீரோ மதிப்பெண்ணுக்கு கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி.” என விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல், நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளது என பாமக தலைரும், மருத்துவருமான அன்புமணி ராமதாஸ் தனது கண்டன அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளார்.