Whatever the position of the state the national highway will begin to work.

கிருஷ்ணகிரி

அரசின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வலியுறுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சுந்தரராசன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர், “கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பெங்களூரு, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய நகரங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும்.

தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஏராளமான அடியார்கள் வந்து செல்கின்றனர்.

பல ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தச் சாலை வழியாக பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கும் செல்கின்றனர். ஆனால் இந்தச் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது.

இந்த சாலையில் கடந்த பத்து ஆண்டுகளில் 680 பேர் சாலை விபத்தில் மரணமடைந்து உள்ளனர். எனவே, அரசின் நிலைபாடுகள் என்னவாக இருந்தாலும் சரி, மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், ஜெயராமன், கோவிந்தசாமி, நஞ்சுண்டன், இருதயராஜ், சாம்ராஜ், வாசுதேவன், ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி உள்பட பலர் பங்கேற்றனர்.