செந்தில் பாலாஜி சிறையில் என்ன செய்கிறார்? சிறைத்துறை டிஐஜி தகவல்!
செந்தில் பாலாஜி சிறையில் என்ன செய்கிறார் என்பது பற்றி சிறைத்துறை டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9ஆவது முறையாக நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவ காரணத்தைக் கூறி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற 30ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
எனவே, புழல் சிறையிலும் மருத்துவர்கள் அவ்வப்போது அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல் எடை சற்று குறைந்துள்ளதாக சிறைத்துறை டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறைத்துறை டிஐஜி கனகராஜ் கூறுகையில், “செந்தில் பாலாஜி மன அழுத்தத்தில் உள்ளார். அவரது உடல் எடை சற்று குறைந்துள்ளது. சிறையில் உள்ள நூலகத்தில் நேரத்தை செலவிடுகிறார். செந்தில் பாலாஜிக்கு தேவைப்படும்போது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.” என தெரிவித்துள்ளார்.