அடுத்து என்ன? புதிய டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி!
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் பொறுப்பேறுக் கொண்டார்
தமிழ்நாட்டு காவல் துறையின் தலைவர் சைலேந்திர பாபு இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிதாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு இயக்குநராக சங்கர் ஜிவால் மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். சங்கர் ஜிவாலிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்ற சைலேந்திர பாபுவை, அவரது காரில் அமரவைத்து வடம் பிடித்து இழுத்து காவல் உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்ட உள்ளது. காவல்துறையில் போதுமான காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும்.” என்றார்.
உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் தமிழக கேடரை சேர்ந்த 1990ஆம் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாவார். முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரியான சங்கர் ஜிவால், மதுரை எஸ்.பி., மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி உள்ளிட்ட பல்வேறு காவல்துறை பொறுப்புகளை வகித்துள்ளார். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த அவர், அதிரடிப்படை ஐ.ஜி.யாகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த பணிக்காக 2 முறை குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்ட சங்கர் ஜிவால், தற்போது தமிழகத்தில் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்.