courtallam : கொளுத்தும் வெயில்...குற்றாலத்திற்கு செல்லலாமா.? அருவிகளில் தண்ணீர் விழுகிறதா.? கள நிலவரம் இதோ...
வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குழுமையான இடங்களை தேடி மக்கள் ஓடி செல்கின்றனர். அந்த வகையில் குற்றாலத்தில் தற்போது சீசன் எந்த நிலையில் உள்ளது. அருவிகளில் தண்ணீர் வருகிறதா என்பதை தற்போது பார்க்கலாம்.
கொளுத்தும் வெயில் - தப்பித்து ஒடும் பொதுமக்கள்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வதைப்பதால் வீட்டிற்குள் மக்கள் முடங்கி கிடக்கின்றனர். எனவே வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள குழுமையான இடங்களை தேடி ஓடி செல்கின்றனர். அந்த வகையில் உதகை, கொடைக்காணல் என பல இடங்களும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன் படி உதகைக்கு ஒரு வழிப்பாதையில் தான் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ், வேன் போன்ற வாகனங்களும் ஊட்டிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் நிலவரம் என்ன.?
இதே போல கொடைக்கானல் பகுதியிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. விடுமுறை தினமான நேற்று சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவானது. எனவே மக்கள் எங்கே செல்வது வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். உதகை மற்றும் கொடைக்கானலுக்கு மாற்றாக குற்றாலத்தில் தண்ணீரில் குளிக்க பொதுமக்கள் விரும்பியுள்ளனர். ஆனால் தற்போது முன் எப்போதும் இல்லாத வகையில் குற்றாலம் வறண்டு காணப்படுகிறது.
வறண்ட பாறைகள்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் குற்றால அருவிகள் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் கோடை விடுமுறை என்பதால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஐந்தருவியில் சிறிதளவு விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு கொண்டு குளித்து செல்கின்றனர். இன்னும் சில தினங்களில் குற்றால சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.