அதிமுக,பாஜக தேர்தலை புறக்கணித்தும் ஈரோட்டில் குவியும் வாக்குகள்; இதுவரை எத்தனை சதவீதம் தெரியுமா.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் உட்பட 46 பேர் களத்தில் உள்ளனர். காலை 11 மணி அளவில் 27 சதவிகித வாக்குகளும், மதியம் 1 மணியளவில் 42.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து அந்த தொகுத்திக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இதனால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக களம் இறங்கியுள்ள நிலையில், அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது. இதன் காரணமாக திமுகவுடன் நாம் தமிழர் கட்சி நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது.
வாக்காளர்கள் எத்தனை பேர்.?
அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! அதிமுக, பாஜக ஓட்டு யாருக்கு?
வாக்களித்த திமுக வேட்பாளர்
காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் 300 பேர், பட்டாலியன் போலீசார் 450 பேர், ஆயுதப்படை போலீசார் 250 பேர், சட்டம் ஒழுங்கு போலீசார் 1,678 பேர் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள ( பிவிபி ) தனியார் பள்ளியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார், தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
வாக்கு சதவிகிதம் என்ன.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முக்கிய கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக புறக்கணித்துள்ள நிலையில் வாக்கு சதவிகிதம் கணிசமாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் காலை 11 மணி அளவில் 27 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், மதியம் 1 மணியளவில் 42.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

