“தனியார் பள்ளிகளை விடுத்து, அரசுப் பள்ளிக் கூடங்களில் படிக்க மாணவர்கள் விரும்ப வேண்டும். அந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கடமையாகும்” என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி கூறினார்.
அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி கூறினார்
காஞ்சிபுரம் மாவட்டக் கல்வித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில், தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை, புத்தகப் பை, காலணி மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
“அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, சாதிச் சான்று வழங்க கணினி வழியில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்ட விவரம் குறித்தும், மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச் சான்று வழங்கும் வகையில் அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் மாணவர்களின் விவரங்களை உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், நடமாடும் ஆலோசனை மையங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயனுள்ளது. அது, அனைத்து பள்ளிகளுக்கும் முழுமையாகச் சென்றடைய வேண்டும்.
ஆதார் அட்டை விண்ணப்பித்து கிடைக்கப் பெறாத மாணவர்களுக்கு அவை உடனடியாக கிடைக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் கற்றல் கற்பித்தல் சிறந்த முறையில் இருக்க அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டும்.
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் ஆலோசகர் மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கவும், 12-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் என்பதற்கும், வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளையும் கல்வித் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்.
அறிவியல் கண்காட்சிகளில் மாணவர்களைப் பங்குபெற செய்வது மட்டுமின்றி அவர்கள் மூலம் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்காட்சிகளில் இடம்பெற செய்யும் வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.
தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக உள்ளனர். மாணவர்களின் திறமையும் தனியார் பள்ளிகளைவிட மேலோங்கி உள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்க மாணவர்கள் விரும்ப வேண்டும். அந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கடமையாகும்” என்றுத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கற்பகவள்ளி, தமிழரசி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன், மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
