Katchatheevu கச்சத்தீவு பிரச்சினையும்; கலைஞர் சொன்னதும் என்ன?

கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் பூதாகரமாகியுள்ள நிலையில், அதுபற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

What is Katchatheevu island issue and kalaignar karunanidhi explain smp

கச்சத்தீவை மீட்போம் என பல ஆண்டுகாலமாக அரசியல்கட்சிகள் தேர்தலின் போது வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தல் 2024க்கு இன்னும் 20 நாட்களே உள்ளதற்கு இடையே, கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அண்ணாமலை பெற்ற தரவுகளைப் பகிர்ந்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. காங்கிரஸை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக உழைத்து வருகிறது.” என பதிவிட்டுள்ளார்.

 

 

முன்னதாக, “கச்சத்தீவு குறித்து வெளியுறவுத் துறையில் ஆர்.டிஐ மூலம் தகவல்களைப் பெற்றேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் இறையாண்மை, எல்லை காங்கிரஸ் ஆட்சியில் விட்டுக்கொடுக்கப்பட்டது. நாளை இரண்டாவது ஆவணம் வெளியிடப்படும், கச்சத்தீவு குறித்து கருணாநிதி பேசிய விவரங்கள் இடம்பெறும்.” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு பிரச்சினை

தமிழக அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் இவை இரண்டிலுமே நீக்க முடியாத பெயர் கச்சத்தீவு. 1974ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா இடையே கச்சத்தீவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள விரிகுடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் இந்த ஒப்பந்தத்தின்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை.

கச்சத்தீவு ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும் அங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கலாம் என்ற இரண்டு உரிமைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட போது, தமிழகத்தி திமுக ஆட்சியில் இருந்தது. எனவே, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்று இன்றளவும் அதிமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சிறையில் இருக்கும் கணவர்கள்: ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஆறுதல் கூறிய மனைவிகள்!

ஆனால், அந்த சமயத்தில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.  அனைத்துக் கட்சி கூட்டத்திலும், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. கச்சத்தீவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். ஆனால், கச்சத்தீவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்து போடகூட அதிமுக மறுத்துவிட்டது என்பது திமுகவினரின் விளக்கமாகவும், குற்றச்சாட்டாகவும் உள்ளது.

கச்சத்தீவு விவகாரம் கலைஞர் கருணாநிதி சொன்னது என்ன?

1974ஆம் ஆண்டில் கச்சத்தீவு குறித்து கலைஞர் கருணாநிதி சட்டப்பேரவையில் முன்மொழிந்த தீர்மானத்தில், “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.” என கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “கச்சத் தீவை  இந்தியா தாரை வார்த்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாகச் சொல்கிறாரே,  நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதார பூர்வமாக எடுத்துச் சொன்னால் எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா? 

கச்சத் தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறையாவது தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து கச்சத் தீவை மீட்பது பற்றி கலந்தாலோசனை நடத்தியது உண்டா? நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத் தீவுப் பிரச்சினையில், “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்றும், “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத் தான்” என்றும்; “கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்றும்; சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது. எனவே ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது!” என கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios