Corporation : தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது.? மாநகராட்சி ஆவதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும்.?
மாநகராட்சியானது மக்கள் தொகை மற்றும் வருமானத்தை அடிப்படையாக வைத்து தரம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 25 மாநகராட்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள்
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து உடனுக்குடன் பணிகளை செய்வதில் முக்கிய பங்குவகிப்பது மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியாகும். அரசின் திட்டங்களை கீழ் மட்டத்தில் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்த அமைப்புகளின் பங்கு முக்கியமானது. உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி என இருவகையாகப் பிரிக்கலாம். இதில் தான் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளது. மாநகராட்சி என்பது பெருநகர் பகுதியினைக் கொண்ட ஒரு உள்ளாட்சி அமைப்பாகும். 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் சென்னைதான் முதல் மாநகராட்சியாக உதயமானது.
தகுதிகள் என்ன.?
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது. அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தொகை மற்றும் வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. மக்கள் தொகை 10,000 - 50,000 வரை பேரூராட்சியாகும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நகராட்சியாகும், ஒரு லட்சத்திற்கும் மேல் மாநகராட்சியாக வகைப்படுத்தப்படுகிறது. 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகை 48.45 % ஆகும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 55 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி தகுதிகள் நீக்கம்
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 28 புதிய நகராட்சிகள் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தான் தற்போது மேலும் 4 மாநகராட்சிகள் துவக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சியாக உயர்த்துவதற்கு மக்கள் தொகை மற்றும் வருமான அளவுகோல் தடையாக இருந்துள்ளது.
இதனையடுத்து தான் மாநகராட்சிக்கான வரையறைகளை தளர்த்தி மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சியாக தரம் உயர்ந்த மக்கள் தொகையோ அல்லது வருமானமோ ஒரு தடையாக இருக்காது அப்பகுதியின் வளர்ச்சியை பொறுத்தே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.