Asianet News TamilAsianet News Tamil

நேரலையில் தற்கொலை.. ஊரை மாற்றிய நாயகன்.. என்ன ஜெயலலிதா உதவியாளர் இப்படி மாறிட்டாரு.!

கதாநாயகன் சிரியாவில் போர் நடக்கும் போது இவர்கள் இரக்கப்படுகிறார்கள், குஜராத்தில் பூகம்பம் வரும்போது இவர்கள் இரக்கப்படுகிறார்கள், ஒரே ஊரில் வாழும் எங்களைப் பார்த்துதான் இவர்களுக்கு இரக்கம் வரவில்லை என்று சொல்லும் போது கண்களில் கண்ணீர் மல்கத்தான் செய்கின்றது.

What a jayalalithaa personal assistant become like this
Author
First Published Dec 19, 2022, 12:07 PM IST

'நெடுநாள் போர்' என்ற குறும்படம் பார்த்தேன். ஜாதி மோதலால் நடக்கும் விபரீதத்தை குறுகிய நேரத்தில் அற்புதமாக சொல்லும் படம் என பூங்குன்றன் கூறியுள்ளார். 

'நெடுநாள் போர்' என்ற குறும்படத்தை பார்த்துவிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் அவரது கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு கிராமத்தை சேர்ந்த இரு பகுதிகளில் ஒரு பகுதியில் 100 வீடுகளும், ஒரு பகுதியில் 10 வீடுகளும் இருக்கின்றன. வடக்கு வளவில் வசிக்கும் 10 வீடுகளில் வாழ்பவர்கள் செல்ல வேண்டிய பாதையை முள்வேலிகளை போட்டு மறைத்து வைக்கிறது 100 வீடுகளை கொண்ட ஒரு சமூகம். குறைந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு நெடுநேரம் சுற்றி செல்வதை தட்டிக் கேட்க கதாநாயகன் புறப்படுகிறார். தாசில்தாரை பார்க்கிறார். அவர் கைவிரிக்க, சட்டமன்ற உறுப்பினரிடம் உதவி கேட்கிறார். சட்டமன்ற உறுப்பினரோ! எப்போதும் போல 100 குடும்பம் தான் முக்கியம் என்று சொல்லி மறுத்து விடுகிறார். கதாநாயகன் சிரியாவில் போர் நடக்கும் போது இவர்கள் இரக்கப்படுகிறார்கள், குஜராத்தில் பூகம்பம் வரும்போது இவர்கள் இரக்கப்படுகிறார்கள், ஒரே ஊரில் வாழும் எங்களைப் பார்த்துதான் இவர்களுக்கு இரக்கம் வரவில்லை என்று சொல்லும் போது கண்களில் கண்ணீர் மல்கத்தான் செய்கின்றது.

இதையும் படிங்க;- அம்மாவோட பயணித்தவங்க நீங்க! நான் சொல்ல வேண்டாம்! அரசியலில் இறங்கி விளையாடுங்க.. சசியை அழைக்கும் ஜெ. நிழல்.!

What a jayalalithaa personal assistant become like this

கதாநாயகனின் தாய் இந்த வேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு என்று அறிவுரை சொல்லும் போது, நான் செத்துப் போனாலும் பரவாயில்லை என் பிணம் நான் விரும்பும் பாதையில் தான் செல்லும் என்கிறார். கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக கதாநாயகனின் நண்பன் பெயர் கொடுக்கின்ற போது தனது கிராமத்தின் பெயர் கட்டையம்பட்டி என்று சொல்கிறான். அங்கு நிற்கும் பெரிய சமூகத்தினர் அது எங்கள் ஊர், உனது கிராமத்தின் பெயர் பீக்காடு என்று கேவலப்படுத்தி, அவனை அடித்து துரத்துகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவன் கதாநாயகனிடம் சொல்லி அழும் போது மயங்கி விழுகிறான். அவனை மருத்துவமனைக்கு மறுக்கப்பட்ட பாதையில் செல்ல முடியாமல் மாற்று பாதையில் அழைத்து செல்கிறான் கதாநாயகன். 

What a jayalalithaa personal assistant become like this

ஆனால் செல்லும் வழியில் நண்பன் இறந்து விடுகிறான். கோபம் கொண்ட கதாநாயகன், நண்பனின் இறுதி காரியத்தை முடித்துவிட்டு ரோட்டை மறைத்து போடப்பட்ட முள்வேலிகளை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறான். வில்லன் குமாரின் நடை விஜயகாந்தை நினைவு படுத்துகிறது. நம்பள பார்த்து நாலு பேர் பயந்து கொண்டு இருந்தால்தான் நாம் அரசியல் செய்ய முடியும் என்பதை குமார் சொல்லும் இடம் அற்புதம். அந்தப் பாதை திறக்கப்பட்டுவிட்டதே என்ன நடக்குமோ என்று வருந்திய கதாநாயகனின் தாய் அந்த இடத்தை தாண்டி வந்து விறகுகளை பொறுக்குகிறார். அப்போது அங்கு வந்த குமாரின் ஆட்கள் அவரை அடித்து, அவரது புடவை உருவி விடுகிறார்கள். தாயை அவமதித்ததை தாங்கிக் கொள்ள முடியாத கதாநாயகன் அவர்களை அடித்து துவைக்கிறான். எதிர்பாராத விதமாக குமாரின் தம்பி இறந்து போகிறார். 

இதனை கேள்விப்பட்ட குமார் கதாநாயகனை போட்டு தள்ளினால் தான் எனது தம்பியின் இறுதி சடங்கிற்கு ஊருக்கே வருவேன் என்கிறார்.  தன்னை போட்டு தள்ளுவதற்கு போலீஸே உடந்தையாக இருப்பதை அறிந்த கதாநாயகன், துப்பாக்கியை பிடுங்கி மற்றவர்களை மிரட்டி அங்கிருந்து தப்பி செல்கிறான். நண்பரின் உதவியோடு நியூஸ் 4 என்ற தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் செல்கிறார் கதாநாயகன். தங்களது ஊர் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி கொடுக்கும் நேரடி ஒளிபரப்பில் நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி, கதாநாயகன் பேசத் தொடங்குகிறான்.  குமார் அண்ணா நீங்க தான் இந்த கிராமத்தை காப்பாற்ற வேண்டும். நான் உங்களை விரோதியாக பார்க்கவில்லை, எங்கள் ஊர்க்காரராகத் பார்க்கிறேன். உனக்கு நான் இருப்பது தானே பிரச்சனை, நான் இல்லன்னா உன் கோபம் போயிடுமில்ல... என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இதைக் குமாரும் தொலைக்காட்சியில் பார்க்கிறார்.

What a jayalalithaa personal assistant become like this

இறந்த கதாநாயகன் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. வழிமறித்த பாதையின் அருகே வரும்போது குமாரின் சமூகத்தினர் இந்த வழியாக செல்லக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். போலீஸ் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அப்போது கேப்டன் குமார் அங்கு வருகிறார். மனம் மாறிய அவர், எடுத்துச் செல்லட்டும் என்கிறார். ஆனால் ஊர்க்காரர்கள் விடமாட்டோம் என்கிறார்கள். குமார் வேகமாக சென்று கதாநாயகனின் உடலை தோள் மீது சுமந்து, நானே பிணத்தை தூக்குறேன். தடுக்குறவன் தடுத்து பார்  என்று சொல்லி, அந்த மறைக்கப்பட்ட பாதை வழியே உடலை சுமந்து செல்கிறார். அவரது சமூகத்தை சேர்ந்த ஆட்கள், செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறார்கள். அப்போது 'நீ நெனச்ச பாதையிலே போகுதய்யா உன் பிரேதம்... என்ற பாடல் மனதை கனமாக்கி கலங்க வைக்கிறது. திரைப்படங்களில் மற்றவர்களை அடிக்கும் போது அதில் ஒரு போலித்தனம் இருக்கும். ஆனால் இதில் உண்மையாக அடிக்கிறார்கள், அடித்தும் கொள்கிறார்கள். நமக்கே பரிதாபம் வந்து விடுகிறது. அதுதான் திரைப்படத்திற்கும் குறும்படத்திற்கும் உள்ள வித்தியாசம் போல என பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  'லவ் டுடே' படம் எப்படி இருக்கு.? திடீரென விமர்சகர் அவதாரம் எடுத்த ஜெயலலிதா மாஜி உதவியாளர்.!

Follow Us:
Download App:
  • android
  • ios