வானிலை முன்னறிவிப்பு முதல் செமிகண்டக்டர் வரை! தமிழக வளர்ச்சிக்காக திமுக எம்.பிக்கள் எழுப்பிய குரல்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வானிலை முன்னறிவிப்பு மேம்பாடு, செமிகண்டக்டர் உற்பத்தி, சூரிய மின்சாரம், விவசாய ஆலோசனை சேவைகள், சுற்றுச்சூழல் உகந்த உற்பத்தி முறைகள் மற்றும் இரயில்வே மேம்பாடு என பல்வேறு துறைகளில் திமுக எம்.பிக்கள் மக்களவையில் குரல் எழுப்பியுள்ளனர்.

weather forecasting to semiconductors! voice raised by DMK MPs for the development of Tamil Nadu tvk

*  வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக! மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்

தமிழ்நாடு கடற்கரையோரங்களில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ள வானிலை முன்னறிவிப்பு நிலையங்கள் எத்தனை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாடு கடற்கரையோர பகுதிகளில் கூடுதலாக வானிலை முன்னறிவிப்பு வசதிகளை அமைப்பதற்கான திட்டங்கள் மற்றும் அவை அமைப்பதற்காக நிர்ணயம் செய்திருக்கும் கால இலக்குகள், நாடு முழுவதும் புதிதாக 56 டாப்ளர் ரேடார்களை நிறுவுவதாக முன்மொழியப்பட்ட திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கரையோரங்களில் எந்தெந்த பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் போன்ற விவரங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

* செமி-கண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்! திமுக எம்.பி. கனிமொழி

உலக அளவில் செமி கண்டக்டர் சிப்ஸ் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த  இறக்குமதி 92% அதிகரித்துள்ளது. செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவு நோக்கிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் சமீபத்தில் ஒன்றிய அரசால் ஒப்புதல்  அளிக்கப்பட்ட 3  செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளில் ஒன்று கூட இத்துறையில் ஆற்றல் மிக்க  தென் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. 2023-24 காலகட்டத்தில் இந்தியாவின் மின்னணு சாதன மொத்த ஏற்றுமதியில், 40% தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கிறது. இதில்  உலகத்தரம் வாய்ந்த  செமி கண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள்  உட்பட்டவையாகும். மேலும், தமிழ்நாட்டின் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் விஎல் எஸ்ஐ (VLSI) மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் சிறப்பு படிப்புகளை வழங்கி வருகின்றன.  தமிழ்நாட்டில் இருந்து  ஆண்டுதோறும், 1.13 லட்சம் இளைஞர்கள் டிப்ளோமா மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களில் பட்டம் பெறுகிறார்கள். எனவே இந்தத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க, செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டுக்கு வழங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 

*  வீடுகளுக்கு குறைந்த விலையில் சூரிய மின்தகடுகள்! ஜெகத்ரட்சகன் கோரிக்கை

நாடு முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தை முதன்மை மின்சார ஆதாரமாக பயன்படுத்துவது எனும் இலக்கிற்கேற்ப தொழிற்சாலைகள், தனியார் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்துவதற்கு ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜகத்ரட்சகன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். தொழிற்சாலை சார்ந்த மின்சார பயன்பாட்டிற்கான கட்டமைப்புகளை தற்போதுள்ளதைவிட குறைந்த செலவில் உருவாக்கும் திட்டங்கள் குறித்தும் அவர் விவரங்கள் கேட்டுள்ளார்.

*    விவசாய ஆலோசனை சேவைகள் - தனியார்மயமாக்கலை தவிர்த்திடுக! தமிழச்சி தங்கபாண்டியன்

நிதி ஆயோக் பரிந்துரையின்படி மாவட்ட வேளாண் வானிலை ஆய்வு அலகுகளை (DAMUs) தனியார்மயமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா என்றும் அப்படியென்றால், அரசு இம்முடிவெடுப்பதற்காக மேற்கொண்ட ஆய்வுகள் அல்லது தரவுகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என கேட்டுள்ளார். அரசின் தனியார்மயமாக்கும் முடிவால் சிறு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த அவர், அது குறித்து ஒன்றிய அரசு ஆய்வுகள் மேற்கொண்டிருந்தால் அதன் விவரங்களையும் வெளியிடவேண்டும் என கோரியுள்ளார்.

*  சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளை கடைப்பிடிக்க நடவடிக்கை என்ன? எம். எம். அப்துல்லா கேள்வி

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளை கடைப்பிடித்திட ஒன்றிய அரசு ஆதரவளிக்கிறதா? என்றும் இத்தகைய முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு தனித்துவமான ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையங்களை நிறுவ ஒன்றிய அரசு ஏதேனும் திட்டங்களை வைத்திருக்கிறதா? என்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சந்தை பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எம். அப்துல்லா மாநிலங்களவையில் கேள்விகளை எழுப்பினார்.

*  தமிழ்நாடு முழுவதும் தண்டவாளங்களை மேம்படுத்த வேண்டும்! ஆரணிஎம்.பி. தரணிவேந்தன் 

தமிழ்நாட்டில் இரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு தண்டவாலங்களை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்களவையில் ஆரணி திமுக எம்.பி. எம். எஸ். தரணிவேந்தன் கோரிக்கை வைத்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios