வேலூர்

அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும். தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடக்கூடாது என பா.ஜ.க. திட்டமிடுகிறது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் ச.சசிகுமார் – கு.தமிழ்ச்செல்வி திருமண விழா நேற்று பௌத்த மத முறைபடி நடந்தது.

இந்தத் திருமணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமைத் தாங்கி நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து திமிரி உள்பட பல்வேறு இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றி, கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.

பின்னர் ஆற்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் தொல்.திருமாவளவன்.

அதில், “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு, மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறை ஏற்க இயலாது.

தமிழக அரசு அரசியல் நெருக்கடிகளில் இருக்கிறது. தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தனி கவனம் செலுத்தவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டம் இயற்றினர். குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று விடுவோம் என கூறினர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வருடத்துக்கு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவித்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவிக்கிறது.

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.

ஜி.எஸ்.டி.வரி விதிப்பு, நீட் தேர்வு, மீத்தேன் எடுத்தல், செல் கேஸ், ஐட்ரோ கார்பன் ஆகியவற்றில் மத்திர அரசு, மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது. அதிகாரங்களை குவிக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ளது. அதில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கேரள மாநில முதல் மந்திரி பிரணாயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையாவுக்கும் அழைப்பு அனுப்பி உள்ளோம்.

அதில் திமுக, காங்கிரசு, இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாடு மிகுந்த தாக்கத்தையும் திருப்பு முனையையும் ஏற்படுத்தும்.

அதிமுக உட்கட்சி பூசல் உச்ச நிலையை எட்டி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்போது பெரும்பான்மை இல்லை. அவரை எதிர்க்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கு 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

ஆளுநர் பெரும்பான்மையை நிருபிக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும். அதில் காலம் கடத்தக் கூடாது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டதற்கான பல சான்றுகள் உள்ளது. எனவே அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக குறியாக உள்ளது. அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும். தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடக்கூடாது என பா.ஜ.க. திட்டமிடுகிறது.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவது தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் சாதி மற்றும் மதவாத சக்திகள் தலை தூக்குகின்றன. அதனை ஒடுக்க வேண்டும். ஊழல் கொடுமையானது. அதைவிட கொடுமையானது மதவாதம் ஆகும்.

இராணிப்பேட்டை, இலாலாப்பேட்டை, பொன்னை ஆகிய பகுதிகளில் விளை நிலங்களில் எரிவாயு எடுத்துச் செல்வதற்கு குழாய் பதிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும். இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படும். மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டு இடம் பெயற வேண்டிய நிலை உருவாகும். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. அதேநேரத்தில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்.

அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையால் 36 பேர் பலியாகி உள்ளனர். அரசு மற்றும் தனியாரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும். இதனை கட்டுப்படுத்தாத அரியானா அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளனை பரோலில் விடுவித்ததுபோல் நளினி, முருகனையும் பரோலில் விடுவிக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்ய கோரி மக்கள் அமைதியான முறையில் போராடிய போது கூட விடுவிக்காத அரசு, தமிழக அரசில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை திசை திருப்பும் நாடகமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் சபாநாயகர் தனபால் முதல்வராக வந்தால் வரவேற்போம். அதற்கான வாய்ப்புகள் இல்லை. இது, எதிரணியில் உள்ள தலித் எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுப்பதற்கான திட்டமாகக்கூட இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்” என்று தொல்.திருமாவளவன் கூறினார்.