We will protest on 14th july against GST - said G Ramakrishnan ...

கிருஷ்ணகிரி

ஜி.எஸ்.டிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 14-ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“கடந்த சில நாள்களாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் சிறுபான்மை பயங்கரவாதம் நடைபெற்று வருவதாகவும், மோசமான நிலை உருவாகி வருவதாகவும் பேசி வருகிறார். பயங்கரவாதம் அல்லது வகுப்புவாதம் எந்த அடிப்படையில் வெளிப்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் பொறுப்பாகும்.

ஜி.எஸ்.டி. வரி ஏழை, எளிய மக்களுக்கு நலன் தரும் என்றார் பிரதமர் மோடி. பலமுனை வரிகள் ரத்து செய்யப்பட்டு ஜி.எஸ்.டி. வரியான பிறகு ஓட்டல்களில் உணவுகளின் விலை உயர்ந்துவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி உள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 14-ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்குவது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது தொடர் கதையாகிவிட்டது. பேச்சுவார்த்தை மூலமாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழக அரசின் மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்று பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, இலங்கை அரசு கொண்டுவந்துள்ள சட்டம் சரியானதல்ல, ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு மத்திய அரசு மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 18-ஆம் தேதி தி,மு.க., தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்” என்று அவர் கூறினார்.