நாகப்பட்டினம்

காவிரி டெல்டா பகுதியில் அடுத்த தலைமுறையினர் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்

பெட்ரோ கெமிக்கல் மண்டலம் குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள சின்னப்பெருந்தோட்டத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஈழவளவன், வேலுகுபேந்திரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது:

“கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரர்த்து 500 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி, பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கு, சுமார் ரூ.92 ஆயிரம் கோடி முதலீடு செய்யவும், அதில் முதற்கட்டமாக ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இரயில் தண்டவாளங்கள், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக, பல்வேறு கிராமங்களில் குடியிருப்புகள் அகற்றப்படுவதுடன், விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும்.

இதுவரை, வேளாண் மண்டலமாக இருந்து வந்த காவிரி டெல்டா பகுதி, இனி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த தலைமுறை இந்த பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்படும்.

இயற்கை வளங்களை அழிக்காமல், மக்களை அப்புறப்படுத்தாமல், விவசாயத்தை பாழ்படுத்தாமல், எரிவாயு எடுப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருந்தும், அதனை பின்பற்றாமல், நெற்களஞ்சியமாக திகழும் டெல்டாவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது.

இத்திட்டம் தொடர்பாக, நாகை மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், கடலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், தோழமைக் கட்சிகளுடன் ஆலோசித்து, நாகை, கடலூரில் தலா ஒரு ஊரை தேர்வு செய்து, மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று பேசினார்.