Asianet News TamilAsianet News Tamil

கோரிக்கை நிறைவேறும்வரை காத்திருக்கிறோம்; உணவு சமைத்து சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம். ஏன்? 

We wait until the request is fulfilled Farmers struggle to cook and eat food. Why?
We wait until the request is fulfilled Farmers struggle to cook and eat food. Why?
Author
First Published Mar 23, 2018, 7:40 AM IST


திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பயிர்க்காப்பீட்டு தொகை கேட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உணவு சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்தில் தொப்பம்பட்டி, கீரனூர், வேலம்பட்டி, பொருளூர், மஞ்சநாயக்கன்பட்டி, வாகரை, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. 

கடந்த 2016-ஆம் ஆண்டு பருவமழை முறையாக பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. ஆனாலும், பயிர்க் காப்பீடு செய்ததால், அதற்கான தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

ஆனால், தற்போது வரை பயிர் காப்பீட்டுத்தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக் கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று காலை தொப்பம்பட்டி பஸ் நிலையம் முன்பு திரண்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் தொப்பம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

பின்னர், வேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசனை சந்தித்த விவசாயிகள், தங்களுக்கு உடனடியாக பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரினர். "காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக" கதிரேசன் தெரிவித்தார். 

இதில் சமாதானம் அடையாத விவசாயிகள், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்போம் என்று கூறி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அலுவலக வளாகத்திலேயே மதிய உணவையும் சமைத்து சாப்பிட்டனர். பின்னர் அவர்களுடன் வேளாண்மை உதவி இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios