Asianet News TamilAsianet News Tamil

பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு: டிகே சிவகுமார்!

பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்

We should negotiate and solve problem says karnataka deputy cm dk shivakumar
Author
First Published Jul 4, 2023, 3:47 PM IST

காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்றுள்ளார். காவிரி நதி நீர், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம் எனவும் துரைமுருகன் தெரிவித்திருந்தார். மேலும், டெல்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து மேகதாது விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம்!

இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம். அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது. தமிழர்கள் இங்கு வேலை செய்கின்றனர். கன்னடர்கள் அங்கு வேலை செய்கின்றனர்; சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.20 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால் ஜூன் மாதத்தில் வெறும் 2.7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி முறியடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios