ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்

தமிழக முதல்வராக 1991 முதல் 1996 வரை இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதன்படி, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் காரணமாக வெளியே வந்த ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
அதன்பின்னர், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா காலமானதால் அவரை விடுதலை செய்தும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனையை உறுதி செய்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னதாக, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவின் போய்ஸ்கார்டன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தது. விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள், வெள்ளிப் பொருட்கள், தங்க நகைகள், கற்கள் பதித்த நகைகள் உள்ளிட்ட கோடிகணக்கான மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களை ஏலம் விடக் கோரிய சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட, கிரண் ஜவாலி என்ற அரசு வழக்கறிஞரையும் நீதிமன்றம் நியமித்தது.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சார்பில், ஜெயலலிதாவின் சொத்துக்களை, அவரது வாரிசான தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வாரிசுகளுக்கு சேராது என தெரிவித்த நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் இல்லை. அவரிடம் இருந்து சில முக்கியமான பொருட்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள பொருட்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட உண்மையான சொத்துக்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற இருப்பதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்தார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கிரண் ஜவாலி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தபடி ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்க, வைர நகைகள் தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை. விலை உயர்ந்த புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்,” என கூறப்பட்டுள்ளது.