ஈரோடு

அனுமதியின்றி கட்டப்பட்ட வேகத்தடையையும், சாராயக் கடையையும் அகற்றாவிட்டால் ரேசன் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என்று ஈரோட்டில், நஞ்சை ஊத்துக்குளி பகுதி மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்துள்ளது நஞ்சை ஊத்துக்குளி. இங்குள்ள சாராயக் கடைக்கு எதிரே அனுமதியின்றி வேகத்தடை அமைக்கப்பட்டது. இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள், “நஞ்சை ஊத்துக்குளியில் குடியிருப்புகள் நிறைந்த பூலக்காட்டு நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

சாவடிப்பாளையம்புதூர் செல்லும் சாலையில் சாராயக் கடை அமைக்க வேலைகள் நடைபெற்றபோது 100-க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கடை முன்பு முற்றுகை, நஞ்சை ஊத்துக்குளியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை. சாராயக் கடை திறக்கப்பட்டு, தற்போது விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சாராயக் கடை எதிரே உரிய அனுமதியின்றி நான்கு இடங்களில் உயரமான வேகத்தடைகள் அமைத்துள்ளனர். இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளோம்.

இப்பகுதியில் உள்ள சாராயக் கடை, வேகத்தடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
இல்லையென்றால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூலக்காட்டு நகர் பகுதியைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களின் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கவும், தொடர் போராட்டங்களை நடத்தவும் முடிவு எடுத்துள்ளோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

பள்ளிக்கூடத்தின் அருகே வேகத்தடை வைத்தால் பரவாயில்லை, சாராயக் கடை முன்பு வேகத்தடை வைத்திருக்கிறதே? அனைவரையும் நின்று குடித்துவிட்டு செல்ல தூண்டுகிறதோ? நல்ல உத்தி…