செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் முடிவை தமிழக அரசு முற்றிலும் நிராகரிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவிட்டிருந்தார். அவர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதால் அவர் அமைச்சரவையில் தொடர முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். மேலும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால், விசாரணை பாதிக்கப்படும் என்றும் ஆளுநர் கூறியிருந்தார். அவரின் இந்த உத்தரவு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அரசியலிலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஆளுநரின் உத்தரவுக்கு எதிர்வினையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் இதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இந்த கடிதம் தொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் கடிதம் அனுப்ப உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, திமுக எம்.பி வில்சன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு “ அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்ப உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கும் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அமைச்சரை சேர்ப்பது மற்றும் நீக்குவது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். இதை தெளிவுப்படுத்தி முதலமைச்சர், ஆளுநருக்கு கடிதம் எழுத உள்ளார். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவசர கதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை தமிழக அரசு நிராகரிக்கிறது.
அமைச்சர்கள் விஷயத்தில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உச்சநீதிமன்றமும் இதுகுறித்து தெளிவுப்படுத்தி உள்ளது. முதல்வரின் பரிந்துரை இல்லாமல், ஆளுநர் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆளுநர், மீண்டும், மீண்டும் பிரச்சனையை உருவாக்கிறார். அரசியலமைப்பு கொடுத்த உரிமையை ஆளுநர் மீறி இருக்கிறார்.
இல்லாத பூனையை இருட்டில் தேடுவதை போல ஆளுநர் செயல்படுகிறார். திமுக எதையும் சட்டரீதியாக போராட தயக்கம் காட்டியதில்லை. சட்ட ரீதியாக போராடி தான் வெற்றிகளை பெற்று வந்திருக்கிறோம். குற்றம்சாட்டவர் என்பதாலாயே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாது. ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு இருந்தும் அவர் தொடர்ந்து முதல்வராக இருந்தார். எனவே செந்தில் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது” என்று தெரிவித்தார்.
