Asianet News TamilAsianet News Tamil

வரலாற்றில் முதல்முறையாக!! மே மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் உத்தரவு

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து  மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

Water will be released from the Mettur dam on May 24 for the cultivation
Author
Tamil Nadu, First Published May 21, 2022, 2:57 PM IST

இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”  தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில்‌ பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர்‌ அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர்‌ அணையின்‌ நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும்‌ நீர்‌ இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும்‌ உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால்‌ மேட்டூர்‌ அணை தனது முழு கொள்ளளவை விரைவில்‌ எட்டும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின்‌ நலன்‌ கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர்‌ அணையிலிருந்து வழக்கமாக நீர்‌ திறக்கப்படும்‌ நாளான ஜூன்‌ 12க்கு முன்பாகவே, 24.5.2022 முதல்‌ நீரைத்‌ திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மே மாதத்தில்‌ இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர்‌ திறந்துவிடப்படுவது இதுவே முதல்‌ முறையாகும்‌. இதனால்‌, திருச்சி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கரூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, மற்றும்‌ கடலூர்‌ ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில்‌ குறுவை சாகுபடியில்‌ நான்கு லட்சம்‌ ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசனம்‌ பெறும்‌.

மேலும்‌, நடப்பாண்டில்‌ டெல்டா மாவட்டங்களில்‌ கால்வாய்களை தூர்வாரும்‌ பணிகள்‌ அனைத்தும்‌ முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, 23.4.2022 முதல்‌ துவங்கப்பட்டு, ரூபாய்‌ 80 கோடி மதிப்பீட்டில்‌ போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருகின்றன. ஆறுகளில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில்‌, தற்போது வாய்க்கால்கள்‌ மற்றும்‌ வடிகால்களைத்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள்‌ அனைத்தும்‌ 31.5.2022க்குள்‌ முடிவடையும்‌. 

இதனால்‌, மேட்டூர்‌ அணையில்‌ இருந்து திறந்து விடப்படும்‌ நீரானது, முழுமையாக டெல்டா பகுதியின்‌ கடைமடை வரை அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ சென்று அடைய ஏதுவாகும்‌. இவ்வாறு, மிக முன்னதாக மேட்டூர்‌ அணையிலிருந்து நீர்‌ திறந்து விடப்படுவதால்‌, காவிரி டெல்டா விவசாயிகள்‌ அதிக பரப்பளவில்‌ குறுவை சாகுபடியை மேற்கொள்ளவும்‌, சம்பா பயிருக்கான பணிகளை முன்னதாகவே தொடங்கி செயல்படுத்தவும்‌ இயலும்‌. 

வெள்ளக்காலங்களில்‌ சம்பா பயிர்கள்‌ நீரில்‌ மூழ்காது காக்கவும்‌ இந்த நடவடிக்கை உதவும்‌. இது மட்டுமன்றி, தொடர்ந்து
நீண்டகாலத்திற்கு நீர்‌ கிடைக்கப்‌ பெறுவதால்‌ டெல்டா பகுதி முழுவதும்‌ நிலத்தடி நீர்‌ உயர்வதற்கும்‌ இது வழிவகுக்கும்‌. 
இந்நிலையில்‌, குறுவை சாகுபடிப்‌ பணிகளுக்கான விவசாய இடுபொருட்களும்‌, வேளாண்‌ கடன்களும்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ விவசாயிகளுக்கு தடையின்றி கிடைத்திடத்‌ நடவடிக்க எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க: அப்படிபோடு.. இனி பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு..!

Follow Us:
Download App:
  • android
  • ios