அப்படிபோடு.. இனி பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு..!
ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.
சென்னையில் வரும் திங்கள் முதல் ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டுபவர்கள் மற்றும் பின் இருக்கையில் பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான கால பகுதியில் இரு சக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். எனவே, விபத்துகளை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், வரும் 23ம் தேதி (திங்கட்கிழமை) முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.