நீலகிரி
 
நீலகிரி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் பவானிசாகர் அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 3327 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீத்தேக்கம் என்று பெயர். 1950-க்கு பிறகு உருவான இத்திட்டம் 1956-ல் நிறைவடைந்ததால் இந்த அணை பவானிசாகர் அணை என்று அழைக்கப்படுகிறது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சேறும், சகதியும் 15 அடி போக மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும்.

இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 இலட்சத்து 7000 ஏக்கர் நிலங்களும், பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பகுதியைச் சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. 

அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை இருக்கிறது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதி நீலகிரி மலைப்பகுதி.  நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 895 கனஅடி நீர் வந்துக் கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 77.94 அடியாக இருந்தது. 

இந்த நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 3327 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 78.45 அடியாக இருந்தது. 

அணையில் இருந்து ஆற்றுக்கு விநாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், வாய்க்காலுக்கு விநாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. இவையனைத்தையும் விட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.