water for pepesi

பெப்சி, கோக் கம்பெனிகளுக்கு தண்ணீர் தரக்கூடாது….புதிய சட்டம் இயற்ற பிருந்தா காரத் வலியுறுத்தல்..

தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் தருவதை தடுத்து நிறுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான நிறுவன ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை அருகே தாமிரபரணி ஆற்றில் இறங்கி தண்ணீர் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கரத் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய, பிருந்தா காரத், தாமிரபரணியில் உபரி நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவது போலவும், அதனால் உபரி நீர் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது போலவும் போலியான தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சி செய்வதாக தெரிவித்தார்.

ஆனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் வசிக்கும் பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது அனைவரக்கும் தெரியும் என கூறினார்.

இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மக்களின் அனுமதி இன்றி தண்ணீர் எடுக்க அரசு அனுமதி கிடையாது என்று சட்டம் வரவேண்டும் என்று வலியுறுத்திய பிருந்தா காரத், கேரளா மாநிலத்தில் குளிர்பான நிறுவனத்தை விரட்டி அடிக்க மக்கள் முடிவு செய்தனர் அவர்களை . ஒன்றுபட்டு விரட்டி அடித்ததால் தற்போது அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதே போல் நெல்லையிலும் மக்கள் ஒற்றுமை, விடா முயற்சி மூலம் போராடி வெற்றி பெற வேண்டும் என பிருந்தா காரத் தெரிவித்தார்.

.