தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால், பின்னர் ‘விடியல்’ என்பதே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கி விடும். எனவே நாம் விழிப்புடன் செயல்படும் காலம் இது
அதிமுக சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர், கிறிஸ்துவ மக்களை மிகவும் நேசித்தவர். தனது திரைப்படங்களில் இயேசுபிரானின் கருத்துக்களை, பாடல்கள் வாயிலாக சொல்லி மக்களை நேர்வழிப்படுத்தியவர்.
உதாரணமாக ஒரு பாடலில் புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? - தோழா ஏழைகள் நமக்காக என்றும் மற்றொரு பாடலில் முன்பு ஏசு வந்தார், பின்பு காந்தி வந்தார். இந்த மானிடர் திருந்திட பிறந்தார் என தனது பாடல்கள் மூலம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கத்தை பாமரரும் தெரிந்து, நல்வழி செல்ல வேண்டும் என விரும்பினார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மா, தான் பெற்ற கல்வியும், ஞானமும் கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்கள் மூலமாக பெற்றதாக பெருமிதத்தோடு பல மேடைகளில் கூறியுள்ளார். அம்மா கிறிஸ்துவ பெருமக்களை நேசித்ததோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அதிமுக சார்பில் அனைவரோடும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார். சிறுபான்மை மக்களுக்கு அரசின் மூலம் எண்ணற்ற திட்டங்களை வகுத்து, பல்வேறு நன்மைகள் கிடைக்கும்படி செய்தார். அம்மாவின் அரசும் அதை தொடர்ந்து செய்து வந்தோம்.

இயேசுபிரான் அவர்கள் தீய சக்திகளை அழிக்க உலகத்திற்கு ஒளியாக வந்தார். தீய சக்தியாக இருப்பவர்களை ஒளியின் வேஷம் தரித்தவர்கள் என்றும், மக்கள் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் நமக்கு அறிவுறுத்தினார். இந்த கருத்தை விளக்க ஒரு கதை ஒன்றைக் கூற விரும்புகிறேன்.
ஒரு ஊரில், ஒரு விவசாயி, தனது விளை நிலத்தின் அருகில் ஓர் ஆட்டுப்பண்ணை வைத்து, நிறைய ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை கண்காணிக்க மேய்ப்பர்களையும், காவலாளிகளையும் நியமித்தார். நல்ல பராமரிப்பால் ஆடுகள் நன்கு வளர்ந்தன. இதை பார்த்த சில ஓநாய்கள், எப்படியாவது இந்த ஆடுகளை கவர்ந்து சென்று, நமக்கு இரையாக்க வேண்டும் என திட்டமிட்டன. ஆனால், காவலாளிகளின் கண்காணிப்பு கடுமையாக இருந்ததால் ஓநாய்களால் ஆடுகளைக் கவர்ந்து செல்ல முடியவில்லை. எனவே ஓநாய்கள் தந்திரமாக ஆடுகளை கவர்ந்து சென்று இரையாக்க திட்டமிட்டன.

ஒருநாள் இரவில், ஓநாய்கள் ஆட்டு தோலை தங்கள் மேல் போர்த்திக் கொண்டு, கள்ளவாசல் வழியாக உள்ளே வந்து, தாங்களும் ஆடுகள்தான் என்பதைப் போல நடித்து, அப்பாவி ஆடுகளை நம்ப வைத்து, தந்திரமாக அவைகளை அழைத்துச் சென்று தங்களுக்கு இரை ஆக்கிவிட்டன. அந்த அப்பாவி ஆடுகள், தாங்கள் ஓநாய்க்கு இரையாகும் போதுதான், அந்த ஓநாய்களின் சுய ரூபத்தை அறிந்து, ‘ஐயோ மோசம் போய்விட்டோமே’ என வருந்தின. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய உண்மை என்னவென்றால், ‘காலம் கடந்து வந்த ஞானோதயத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை’.
இன்றைய அரசியலில், பரம்பரையாக தாங்களே பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாக்கு வங்கிக்காக ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு வரும் ஓநாய் கூட்டத்தினரிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால், பின்னர் ‘விடியல்’ என்பதே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கி விடும். எனவே நாம் விழிப்புடன் செயல்படும் காலம் இது’’ என்று பேசினார்.

