தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட SIR பணியில் விண்ணப்பங்கள் பதிவேற்றப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாட்டின் 12 மாநிலங்களில் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று விண்ணப்பங்களை வாக்காளர்களின் முன்னிலையில் பூர்த்தி செய்து அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் கடந்த 14ம் தேதி நிறைவு செய்யப்பட்டன. தமிழகத்தில் மொத்தமாக 6,41,14,587 வாக்காளர்களில் 6,41,13,772 படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றில் 6,41,13,221 படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக வேறு முகவரிக்கு மாறியவர்கள், இரட்டைப் பதிவு வாக்காளர்கள், கண்டுபிடிக்கவே முடியாதவர்கள் ஆகியோரின் உண்மைத்தன்மை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு பட்டியலில் இணைக்கப்பட்டது.

அதன்படி தயார் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் வெளியிடுகிறார். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆகட்சியரக இணையதளங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டு பரிசோதிக்கலாம்.

இந்த பட்டியலில் உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கும் பட்சத்தில் ஜனவரி 18ம் தேதி வரை முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுமை பெற்ற பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற ஜனவரி 17ம் தேதி வெளியிடப்படும்.