Wards List Release people will seen till 2nd januray

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மறுசீரமைக்கப்பட்ட வார்டுகள் பட்டியலை ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்டு வருகிற ஜனவரி 2-ஆம் தேதி வரை மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சீரமைக்கப்பட்ட வார்டுகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்று மதியம் ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இலட்சுமணன், துணை ஆட்சியர் (பயிற்சி)இலாவண்யா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதன்பின்னர் ஆட்சியர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியது: "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. 2011–ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளும், கோவில்பட்டி, காயல்பட்டினம் ஆகிய நகராட்சிகளில் மொத்தம் 54 வார்டுகளும், 10 பேரூராட்சிகளில் 294 வார்டுகளும் உள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளான மாவட்ட பஞ்சாயத்தில் 17 வார்டுகளும், ஊராட்சி ஒன்றியங்களில் 174 வார்டுகளும், கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 943 வார்டுகளும் உள்ளன.

இந்த மறுசீரமைப்பின்போது, மொத்த வார்டுகள் எண்ணிக்கையும், உறுப்பினர்கள் எண்ணிக்கையும் மாற்றம் செய்யப்படவில்லை. ஒவ்வொரு வார்டிலும் 2011–ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நடைமுறை சாத்தியத்திற்கு உட்பட்டு ஒரே மாதிரியாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்டின் அமைப்பும் நிலவரைவியல் ரீதியாக அடக்கமான பகுதியாகவும், அருகருகே உள்ளதாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. மறு சீரமைப்பு செய்யப்படும் வார்டுகள், அதன் நிலவியல் அமைப்பின் அடிப்படையில் அந்தந்த உள்ளாட்சியின் பரப்புக்குள் வடமேற்கில் தொடங்கி தென்கிழக்கில் முடியும் வகையில் மாறி, மாறியும், தொடர்ச்சியாகவும் வார்டு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்ட வார்டுகள் பட்டியல் வருகிற 2–ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட வார்டு மறுசீரமைப்பு அலுவலகங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. மக்கள் இந்த பட்டியலை பார்வையிட்டு, ஏதேனும் மறுப்புகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால், உரிய அலுவலரிடம் வருகிற 2–ஆம் தேதி மாலை 5–45 மணி வரை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம்.

சுய சான்றொப்பமிட்ட ஆவணங்கள் தரப்பட்டிருந்தால் அவை திருப்பி தரப்படமாட்டாது. மக்களின் கருத்துக்கள் சம்பந்தப்பட்ட வார்டு மறுசீரமைப்பு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, 15 நாள்களுக்குள் இறுதி அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்" என்று அவர் கூறினார்.