நடிகை சாவித்திரி குறித்து படம் எடுக்கவே வேண்டாம் என்றுதான் நான் சொல்வேன் என்றும் இறந்துவிட்ட ஒருவர் பற்றி ஏன் மீண்டும் கிளற வேண்டும் என்று பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி கூறியுள்ளார்.

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை இயக்குனர் நாக் அஷ்வின் என்பவர் இயக்கி வருகிறார். தமிழில் 'நடிகையர் திலகம்' என்றும் தெலுங்கில் 'மாகநதி' என்றும் உருவாகும் இந்த படத்தில், சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சாவித்திரி படத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷுக்கு தகுதி இல்லை என்று சாவித்திரியுடன் பல படங்களில் நடித்தவரும், அவரது தோழியுமான ஜமுனா கூறியுள்ளார்.

இது குறித்து பத்திரிகை ஒன்றில் நடிகை ஜமுனா பேசும்போது, நான் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது சாவித்திரியுடன்  நடித்தவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். சாவித்திரியை பற்றி மற்றவர்களை விட தனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவரை பற்றி என்னிடம் எதுவும் கேட்காமல் அவருடைய வாழ்க்கையைப் படமாக்குவது வேதனையாக உள்ளது.

இந்த படத்தில் சாவித்திரியாக நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சுத்தமாக தெலுங்கு மொழி தெரியாது. மொழி தெரியாத ஒருவர் எப்படி அந்த கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடிக்க முடியும்? இதனால் இந்த படத்தில் நடிக்க சுத்தமாக தகுதி இல்லாதவர் கீர்த்தி சுரேஷ் என்று ஜமுனா கூறியுள்ளார்.

சாவித்திரி பற்றிய நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டபோது, தற்போதைய நடிகைகள் அரைகுறை ஆடையுடன் நடிக்கின்றனர் ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நானும் சாவித்திரியும் சேர்ந்து நடித்திருக்கிறோம். எனக்கு மகன் பிறந்தபோது தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு கூட சாவித்திரி வந்திருந்தார். அப்போது கணவர் அமைவது அவரவர் புண்ணியம். உனக்கு நல்ல கணவர் அமைந்து இருக்கிறார் ஆனால் ஜெமினி கணேசன் என்னை மோசம் செய்துவிட்டார் என்று சொல்லி தன்னை கட்டிப்பிடித்து அழுதார். அதற்கு நான், நாங்கள் தடுத்தும் கேட்காமல் நீதானே விரும்பி அவரை மணந்தாய் என்று ஆறுதல் சொன்னேன் என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகை சாவித்திரி காலகட்டத்தில் நடித்த சௌகார் ஜானகியிடம் பிரபல வெப்சைட் ஒன்று பேட்டி கண்டது. அப்போது பேசிய சௌகார் ஜானகி, சாவித்திரியுடன் நடித்தவர்களின் நானும் இன்னும் உயிரோடுதான் இருக்கேன். ஒருத்தரோட வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்போது, அதில் இயக்குநரின் கற்பனையும் கொஞ்சம் சேரத்தான் செய்யும். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தபோதும், இது மாதிரியான கருத்துக்கள் வரத்தானே செய்தது என்றார்.

மேலும் பேசிய அவர், சாவித்திரி விஷயத்தில் தனக்கு மட்டும்தான் அவர் பற்றி எல்லாம் தெரியும் என்று ஜமுனா சொல்லியிருந்தால், அது சரியான வார்த்தை கிடையாது. நானும் சாவித்திரியும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். அவரும் நானும் 'ஆறத காய' என்ற கன்னடப்படத்தில் நடிக்கும்போதுதான் அவர் நிலைமை மிகவும் மோசமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவே
முடியாத உலகத்துக்கு சென்று விட்டார். அவரது கடைசி காலங்களில்கூட அவருடன் நான் நல்ல நட்புடன்தான் இருந்திருக்கிறேன். அதேபோல் நிறைய விஷயங்களையும் மனம் விட்டு பேசியிருக்கிறோம் என்றார்.

அவுட்டோர் ஷூட் போகும்போதெல்லாம் நான் செல்ஃப் குங்கிங்தான். நான் சமைச்சதை இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். நிறைய பேசியிருக்கிறோம். சொந்த விஷயங்களைப் பேசும்போது, உன்னை மாதிரி தைரியம் எனக்கு வராது என்று அடிக்கடி சொல்வார்.

சாவித்திரி வாழ்ந்தது, வீழ்ந்தது எல்லாருக்கும் தெரியும். அவர் பற்றிய படம் எடுப்பது குறித்து என்னைக் கேட்டால், எடுக்கவே வேண்டாம் என்றுதான் சொல்வேன். சாவித்திரி எதனால்
வீழ்ந்தார்; எப்படியெல்லாம் வீழ்ந்தார் என்று அவர் வாழ்க்கையின் சோகமான பக்கங்களை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கும். இறந்துவிட்ட ஒருவர் பற்றி ஏன் கிளற வேண்டும்? என்று சௌர்கார் ஜானகி கூறினார்.