அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை பாஜகவின் அடிமைகள் என கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவும், தவெகவும் தான் போட்டியில் உள்ளன என்றும், அதிமுக எங்குமே இல்லை என்றும் அவர் கூறினார். 

ஓசூரில் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: திமுகவும், தவெகவும் தான் போட்டி. அதிமுக இல்லவே இல்லை எங்கேயுமே இல்லை. இபிஎஸ் சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள். அவர் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் எதுவும் இயலவில்லை. அவர் பிரச்சாரத்தையே நிறுத்திவிட்டார். 177-வது சட்டமன்ற தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் 177 பேர் கூட இல்லை. ஆகவே மக்கள் அவரை ரசிக்கவில்லை. அவரைப் பார்த்தாலே துரோகி என்கின்ற முத்திரைதான் தெரிவதால் அவரை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

பாஜகவை விட்டு ஓபிஎஸ் வெளியே வரமாட்டார்

பாஜகவை விட்டு ஓபிஎஸ் வெளியில் வர மாட்டார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சம்மந்திகள் தான் ஒருவரை ஒருவர் விட்டு வெளியே வருவதற்கு தயக்கம் காட்டுவார்கள். அந்த உறவை எல்லாம் தாண்டி பாஜக தான் ஏதோ புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அம்மா வளர்த்த கட்சி பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சி தந்தை பெரியார் கொள்கையை கொண்ட கட்சி என்பதைப் போன்று ஓபிஎஸ் பாஜகவை பார்க்கிறார்.

ஓபிஎஸ் ஆகட்டும், கட்சியை அடகு வைத்த பழனிசாமி ஆகட்டும், மற்றொரு அம்மா வீட்டில் அமர்ந்து கொண்டு நான் சேர்த்து வைப்பேன். இப்ப பாருங்கள் உடனே தேர்தல் வந்துவிடும். திமுக ஆட்சியை உடனே அகற்றி வீட்டுக்கு அனுப்பி விடலாம் அதைவிடவே கூடாது என்று கூறிவிட்டு அவர்கள் உள்ளே சென்று விடுவார்கள். அந்த அம்மா ஆகட்டும். இன்னொருவர் நான் பேர் கூற விரும்பவில்லை, இன்று அவர் அரசியல் வானில் சுற்றிக்கொண்டிருப்பதற்கு புகழேந்தி தான் காரணம். பெங்களூரு ஜெயில் மற்றும் திகார் ஜெயில் வரையில் அவருடன் நானும் சென்று இருக்கிறேன். ஆனால் அவர் மீண்டும் பழனிசாமியுடன் ஒன்று சேர்ந்துள்ளார்.

சசிகலா மீது கடும் தாக்குதல்

ஆட்சி அதிகாரம் கட்சி அனைத்தையும் நம்பி சின்னம்மா என்கின்ற சசிகலா கொடுத்து விட்டு ஜெயிலுக்கு சென்ற பொழுது திரும்பி வரும்பொழுது அவரிடத்தில் என்ன இருந்தது. உங்களுக்கு அதனை காப்பாற்றிக் கொள்வதற்கு திறமை இல்லை. பழனிசாமி என்கின்ற சர்வாதிகாரி உங்களிடத்திலிருந்து அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு விட்டு உங்களை அனாதையாக தெருவில் நிறுத்தி ஆகிவிட்டது. இப்பொழுது எதை வைத்துக் கொண்டு பழனிசாமிக்கு பக்கபலமாக செல்ல இருக்கிறீர்கள். ஆகவே அவர்கள் அனைவருமே அடிமைகள்.

10 நாட்களில் முடிவு

அவர்கள் நான்கு பேருமே பாரதிய ஜனதா கட்சியினுடைய அடிமைகள். அடி வருடிகள். ஆனால் பாஜகவும் இதை ஒரு பொருட்டாகவும் இவர்களை மதிப்பதும் இல்லை இருந்தபோதிலும் இவர்களாகவே சென்று அவர்கள் காலில் விழுந்து விடுகிறார்கள். அவர்களையும் அவர்களது பணத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் பாஜக காலில் விழுந்து விட்டார்கள். ஆகவே இந்த அரசியலை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதான் உண்மை. 10 நாட்களில் எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நான் கொண்டாடுவேன் என்று பதிலளித்தார். ஆகையால் புகழேந்தி தவெகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.