வீட்டு வாசலில் புதுப்பானையில் பொங்கலிட்ட சசிகலா!
வீட்டு வாசலில் புதுப்பானையில் பொங்கலிட்டு தனது உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை சசிகலா கொண்டாடினார்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதத்தின் பிறப்பை அறுவடை திருநாளாக பொங்கல் தினமாக உலகெங்கிலும் உள்ள தமிழ் இனம் கோலாகலமாக கொண்டாடுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் விழா நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
மார்கழி கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளில் புதுப்பானையில் புத்தரிசியிட்டு வெல்லம் உள்ளிட்டவைகள் கலந்து பொங்கலிட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மறுநாள், தம்மோடு உழைத்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் பல வண்ண கோலங்களை போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். குளித்து முடித்து புத்தாடைகளை அணிந்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு சர்க்கரை பொங்கல் வைத்து தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அந்த வகையில், தனது வீட்டு வாசலில் புதுப்பானையில் பொங்கலிட்டு தனது உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை சசிகலா கொண்டாடினார். வீட்டு வாசலில் மண் அடுப்பில், விறகு கட்டைகள் போட்டு எரித்து புதுப்பாணையில் சசிகலா பொங்கல் வைத்தார். இந்த நிகழ்வின்போது, அவரது அண்ணி இளவரசியும் உடனிருந்தார். மேலும் பல உறவினர்களும் உடனிருந்தனர். பொங்கல் பொங்கி வரும் போது, பொங்கலோ பொங்கல் என சசிகலா தெரிவித்தார்.
அரசு இயந்திரத்தை கட்சி கருவியாக மாற்றும் திமுக: பாஜக கண்டனம்!
பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சசிகலா, “தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது குடும்பத்தினரோடு இணைந்து பொங்கலிட்டு தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.