Asianet News TamilAsianet News Tamil

அரசு இயந்திரத்தை கட்சி கருவியாக மாற்றும் திமுக: பாஜக கண்டனம்!

திமுக எனும் அரசியல் கட்சியின் அறிக்கையை விடுப்பதற்கு எந்த விதமான அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது

DMK should stop to own tn govt and withdraw its statement against annamalai BJP narayanan thirupathy condemns smp
Author
First Published Jan 15, 2024, 3:07 PM IST

பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு. இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம்  என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் முன்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்தை நிராகரித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது என கூறி,  அவரது கூற்றை முற்றிலும் நிராகரிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு என சுட்டிக்காட்டிய தமிழக அரசு,  “பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை; இருமொழிக் கொள்கையே தொடரும். “எனவும் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், திமுக எனும் அரசியல் கட்சியின் அறிக்கையை விடுப்பதற்கு எந்த விதமான அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று தமிழ் நாடு அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதோடு, ‘அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக்கூடாது என்றும் தமிழ் நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது" என்றும்,தகவல் தொழில்நுட்பத் துறை, தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை என்றும், கலைஞர் உருவாக்கிய தனி கொள்கை என்றும், அண்ணாமலை  கூறியது நகைப்புக்குரியது என்றும் பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும் என்றும், அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் மும்மொழிக்கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பு இல்லை என்றும் இரு மொழிக்கொள்கையே தொடரும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிக்கையை அதிகாரபூர்வமாக தமிழக அரசு கொடுத்திருந்தால் அது சட்ட விரோதமானது. திமுக எனும் அரசியல் கட்சியின் அறிக்கையை விடுப்பதற்கு எந்த விதமான அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்பதை தமிழக அரசு உணரவேண்டும். கடவுள் மறுப்பு என்பது ஈவெரா-வின் கொள்கையாக இருந்தது, அதனால் இந்த அரசு கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுகிறது என்று கூறுமா? அப்படியானால் ஹிந்து அறநிலையத்துறையை கலைத்து விட்டு ஆலயங்களை விட்டு அரசு வெளியேறுமா? ஈ.வெ.ரா-வுக்கும் அரசுக்கும் என்ன தொடர்பு? 

‘மாமா எங்கள் எதிர்காலம் உங்கள் கையில்’: ராகுலுடன் பயணம் செய்த குழந்தைகள்!

அதேபோல் முதல்வராக இருந்த 'கருணாநிதி' என்று குறிப்பிடலாமே அன்றி, 'கலைஞர்' என்ற அடைமொழியை அரசு பயன்படுத்த கூடாது என்ற விவரம் தெரியாமல் அறிக்கை வெளியிடுவது அரசு இயந்திரத்தை கட்சி கருவியாக மாற்றும் மக்கள் விரோத செயல். கட்சி வேறு, ஆட்சி வேறு என்று உணராமல் தமிழக அரசின் பெயரில் அறிக்கைகளை விடுப்பது திமுக வின், தமிழக அரசின் அராஜக செயல்பாடே. ஈவெரா-வின் கொள்கை முற்போக்கு கொள்கை என்று அரசு சொல்வதற்கோ, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறித்து விமர்சனம் செய்வதற்கோ எந்த அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை.

அரசுக்கு ஆலோசனைகளை, கருத்துக்களை, எண்ணங்களை சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்கிற நிலையில், தொழில் நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு 'யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை' என்ற ஆணவ மொழியில் இந்த செய்தி அறிக்கையில் அரசு குறிப்பிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் மும்மொழிக்கொள்கை தமிழகத்தில் உருவாகும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை இந்த அறிக்கையை வெளியிட்ட திமுகவின் இடைத்தரகு அரசு அதிகாரி உணரவேண்டும். எல்லோருக்கும் பொதுவான அரசு ஒரு தனி மனிதரை தாக்குவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு என்பது தொடர்ந்து நடைபெறுவது. ஜனநாயக அமைப்பில், கட்சிகள் அரசை மேற்பார்வையிடும் கருவிகள் தானேயன்றி ஏதோ, தங்களுக்கே சொந்தமானதாக எண்ணி தான்தோன்றித்தனமாக அறிக்கைகள் வெளியிடுவதை அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். நேற்றைய செய்திகுறிப்பை அரசு திரும்ப பெறுவதோடு, பாஜக தலைவர் அண்ணாமலை மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு வருத்தமும் தெரிவிக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios