திருவள்ளூர் மாவட்டத்தில், 19 அரசு பள்ளிகளில் மாணவர்கள் எளிய முறையில் கல்வி கற்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 'விர்ச்சுவல்' வகுப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

கல்வியை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எளிய முறையில் மாணவர்கள் பாடங்களை கற்க வசதிக்காக, மெய்நிகர் வகுப்பறை எனும், 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டத்தை அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி உள்ளது. தமிழகத்தில், மாவட்டம் வாரியாக இத்திட்டத்தை, மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி மையம் மூலமாக, குறிப்பிட்ட பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், கடம்பத்துார், சுண்ணாம்புகுளம், அயப்பாக்கம், கனகம்மாசத்திரம், மாதவரம், பூண்டி, திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளிகள், பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஆகிய அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அம்மையார்குப்பம், அம்பத்துார், காமராஜ் நகர், பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, பொன்னேரி ஆகிய அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி என, மொத்தம், 19 பள்ளிகளில் 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்த திட்டத்தின் வாயிலாக, ஆசிரியர் இல்லாத கிராமப்புற மாணவர்கள், எளிய முறையில் தாங்களாகவே பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்தியா முழுவதும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களையும், மாணவர்கள் இங்கிருந்தே அறிந்து கொள்ள முடியும். இதனால், மாணவர்களுக்கு புத்தக சுமை குறையும்; 'ஆன்லைன்' முறையில் பாடம் நடத்தப்படுவதால், மாணவர்களின் சந்தேகங்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியும்.

மேலும், துறை ரீதியாக நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களின் பாடம் இடம் பெறும் என்பதால், மாணவர்களுக்கு விரிவான தகவல் கிடைக்கும்; பாடங்களை நினைவில் நிறுத்த வழி வகை ஏற்படும். வழக்கமான கரும்பலகை வகுப்பறையில் இருந்து தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட இந்த விரிச்சுவல் கிளாஸ், ஒலி, ஒளி அமைப்புடன், கற்றலின் இனிமை சேர்க்கும் என்பதால், மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.