விருதுநகர்

விருதுநகரில் நான்கு வருடங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்துவரும் கிராம மக்கள் வெற்றுக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர். 

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, இலந்தைக்குளம் ஊராட்சிக்குட்பட்டவை நல்லூர்பட்டி, கொண்டையம்பட்டி, தைலாபுரம், மீனாட்சிபுரம் போன்ற கிராமங்கள். இதில், நல்லூர்பட்டி என்னும் கிராமத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புப் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மற்ற கிராமங்களைக் காட்டிலும் இந்தக் கிராமத்திற்கு மிக மிக குறைந்த அளவிலேயே தண்ணீரே விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரைக் கொண்டு குடிப்பதா? சோறு பொங்குவதா? என்ற கணக்கில் தண்ணீர் உள்ளது. அவ்வளவு குறைவான தண்ணீரை வைத்துக் கொண்டு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். 

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள பக்கத்தில் உள்ள தைலாபுரம், மீனாட்சிபுரம் போன்ற கிராமங்களுக்குச் சென்றாலும் தங்களுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை என்று கூறி மறுத்திவிடுகின்றனர். இம்மக்கள் இப்படியே 4 வருடங்களாக தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

எனவே, முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இக்கிராம மக்கள் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலரிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

தண்ணீருக்குதான் இந்த நிலைமை சாலை போன்ற அடிப்படை வசதிகளில் கூட இந்த கிராமத்திற்கு ஓரவஞ்சனைதான். இதனால் ஆத்திரமடைந்த  கிராம மக்கள் அனைவரும் வெற்றுக் குடங்களுடன் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலாளர்கள், கிராமத்தினரை சமாதானப்படுத்தி நால்வர் மட்டும் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கும்படி அறிவுறுத்தினர். அதனையேற்று கிராம மக்களும் ஆட்சியரை சந்தித்து கொடுத்தனர். 

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்படியே கிராம மக்களும் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.