நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்களிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது வரவேற்கதக்கது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது. இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பின் தங்கினர். இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர். தமிழகம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை, தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மருத்துவ கல்லூரி இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க ஒத்துழைப்பதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு, வரவேற்கத்தக்கது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து வரவேற்கத்தக்கது என்றார். இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில், ஓராண்டுக்கு விலக்களிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது, தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.