தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து, டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சந்தித்துள்ளார். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது. இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பின் தங்கினர்.

இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து பேசினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசின் சார்பில் அவசர சட்ட நகல், மத்திய அரசிடம் அளிக்கப்பட்டதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

அதேபோல், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறும் வகையில் அவசர சட்ட நகல், மத்திய அரசிடம் அளிக்கப்பட்டதாகவும், 85 சதவீத அரசாணையிலும், தமிழகத்துக்கு சாதகமாக சூழ்நிலை இல்லை என்பதால் நடப்பு கல்வியாண்டில் விலக்கு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு பெறுவது குறித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.