தமிழகத்தில் தவெகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50000 வாக்குகள் உள்ளதாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த வாக்கு வங்கியை பணம் கொடுத்து வாங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக ஆகும். திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் காலுன்ற வேண்டும் என விஜய் நினைக்கிறார்.

மீண்டும் வேகமாக செயல்படும் தவெக

அதற்கேற்றப்படி மத்திய பாஜகவையும், திமுகவையும் விஜய் சரமாரியாக விளாசித் தள்ளி வருகிறார். இதற்கிடையே கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு தவெக சற்று முடங்கியது. விஜய் உள்ளிட்ட தவெக தலைவர்கள் வீட்டில் முடங்கிய நிலையில், ஒரு மாத காலத்துக்கு பிறகு தவெக மீண்டும் வேகமாக செயல்படத் தொடங்கியுள்ளது.

தவெகவுடன் கை கோர்க்கப் போவது எந்த கட்சிகள்?

பாஜக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தவெக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றன. இதனால் தவெகவுடன் கூட்டணியில் சேரப் போவது எந்தெந்த கட்சிகள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இந்த நிலையில், தவெகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 25,000 முதல் 50,000 வரை வாக்குகள் உள்ளதாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வாக்கு வங்கி உள்ளது

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''விஜய்யின் தவெக கட்சிக்கு குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. அதை பணம் கொடுத்தோ அல்லது வேறு வழியிலோ அதை பறிக்க முடியாது. தவெகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 25,000 முதல் 50,000 வாக்குகள் வரை தானாக கிடைத்து விடும். வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் தவெக அந்த தொகுதியில் வெற்றி பெறும்'' என்றார்.

அதிமுக எளிதில் வெற்றி பெறும்

தொடர்ந்து பேசிய ஏ.சி.சண்முகம், ''வாஜ்பாய் காலம் முதல் புதிய நீதிக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நீடித்து வருகிறது. வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவார்கள். தமிழகத்தில் தவெகவுடன் சேர்த்து மும்முனை போட்டி நிலவினாலும் அதிமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும்'' என்று தெரிவித்தார்.