Secular Social Justice Victory Alliance : நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த இந்த முக்கிய கூட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) ஆட்சிக் கூட்டணிக்கு ஒரு வழியாக பெயர் வைத்துவிட்டார்கள். புதன்கிழமை, செப்டம்பர் 9 அன்று, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த இரண்டாவது கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி' (Secular Social Justice Victory Alliance) என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தவெக நிறுவனரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் தலைமையில் இந்த முக்கியமான கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களில், தங்க நிற குர்தா மற்றும் வேட்டியில் இருந்த விஜய், வெற்றிச் சின்னமாகக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். அவருக்குப் பின்னால் இருந்த திரையில் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் காட்டப்பட்டன.

கூட்டணி கூட்டத்தை புறக்கணித்த கம்யூனிஸ்ட்

ஆளும் கூட்டணியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை இறுதி செய்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர், பொது குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் வழிகாட்டுதல் குழு அமைப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI-M) ஆகிய இரண்டு கட்சிகளுமே பனையூர் கூட்டத்தைப் புறக்கணித்தன.

தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்போம், ஆனால் நேரடி கூட்டணி அமைப்பில் சேரமாட்டோம் என்று இடதுசாரிக் கட்சிகள் முன்பே தெரிவித்திருந்தன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், 'அரசு நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஆதரவளிக்கிறோம். அமைச்சரவையில் இடங்கள் ஒதுக்கப்படாத நிலையில், ஒரு முறையான கூட்டணி அமைப்பில் சேர நாங்கள் விரும்பவில்லை' என்று கூறியிருந்தார். 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, ஆளும் கூட்டணிக்குள் சில சலசலப்புகளும் எழுந்துள்ளன.

பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தவெக-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு இழுபறி நிலவி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் நாட்டின் பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்று தவெக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்பு கூறியிருந்தார். மேலும், 2029 தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஆதரிக்கவில்லை என்றால், காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அமைச்சர் ராஜ்மோகன், 'அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல, பாசத்தில் சொல்லப்பட்டது' என்று விளக்கம் அளித்தார்.