கரூர் சோக சம்பவத்தை தொடர்ந்து விஜய், சோகத்தில் உறைந்திருக்கும் நிலையில், அவரது வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பரிதாபமாக பலியாயினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மனமுடைந்த தவெக தலைவர் விஜய் உடனடியாக சென்னை சென்றடைந்தார். கரூர் சம்பவத்தால் மனமுடைந்த விஜய், யாரிடமும் பேசாமலும், நேற்று மதியத்துக்கு பிறகு சாப்பிடாமலும், தண்ணீர் கூட குடிக்காமலும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடுத்து விடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

தீவிர சோதனை

இதனைத் தொடர்ந்து சென்னை காவல் துறையினர் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. ஆகவே இது புரளி என்பது தெரியவந்தது. விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் சம்பவத்துக்கு விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை திராவிட கழகத்தினர் இன்று முற்றுகையிட முயன்றது குறிப்பிடத்தக்கது.