கிட்னி திருட்டு சம்பவத்தை கடுமையாக விமர்சித்த விஜய். விசைத்தறி தொழிலாளர்களின் அவலநிலைக்கு திமுக அரசே காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், தனது ஆட்சி அமைந்ததும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
Kidney theft scandal TVK Vijay : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள நிலையில், உங்க விஜய் நான் வரேன் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாவட்டந்தோறும் மக்களை சந்தித்து பேசி வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது பயணத்தை தொடங்கிய விஜய், அரியலூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து இன்று நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய விஜய், தானிய சேமிப்பு கிழங்குகள் அமைக்கப்படும். கொப்பரை தேங்காய் மூலம் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார்.
கிட்னி திருட்டு- கடும் நடவடிக்கை விஜய் எச்சரிக்கை
முட்டை சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது ஆனால் இதுவரைக்கும் ஆண்ட கட்சியும் செய்யவில்லை, தற்போது ஆட்சியில் உள்ள கட்சியும் செய்யவில்லை என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய விஜய், திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு அதுதான் நாடறிஞ்ச விஷயமாச்சு, அதை நான் திருச்சியிலே பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விசைத்தறியில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து அந்த கிட்னி திருட்டு நடந்திருக்கும் என்று சொல்றாங்க, இதில் ஈடுபட்டவங்கள யாராக இருந்தாலும் நம்ம ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவாங்க
இந்தக் கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா கந்து வட்டி கொடுமையில் உள்ளது. திமுக அரசு அவர்களது தொழிலை மேம்படுத்தாத காரணத்தால அவங்க கிட்னி விக்கிற அளவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதை எவ்வளவு பெரிய ஒரு கொடுமை. விசை தறி தொழிலாளர்களுடன் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த தேவையான தீர்வுகளை யோசித்து உறுதியா தவெக தேர்தல் அறிக்கையில் செல்வோம் என விஜய் தெரிவித்தார்.
