கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார்? என்பது குறித்து அவரது உயிர் நண்பனான சஞ்சீவ் மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் மனதில் வலியுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இரவோடு இரவாக சென்னைக்கு சென்றது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகு சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு மேலாகியும் விஜய் வீட்டை விட்டு வெளியே வராததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காத விஜய், வீடியோ கால் மூலம் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மனம் திறந்து பேசிய சஞ்சீவ்
தனது சுயநலத்துக்காக 41 உயிர்களை காவு வாங்கி விட்டதாக விஜய் மீது சினிமா துறையை சேர்ந்த சிலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார்? என்பது குறித்து அவரது உயிர் நண்பனான சஞ்சீவ் மனம் திறந்து பேசியுள்ளார். ''யாராக இருந்தாலும் இத்தனை உயிர்கள் போன பின்பு மிகவும் வருத்தமாக இருக்கும்.
விஜய் மனதில் வலி
விஜய் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அவர் மனதில் மிகவும் வலியுடன் உள்ளார். நான் விஜய்யிடம் பேசினேன். இந்த நிலைமையில் என்னதான் ஆறுதலாக சொன்னாலும் கோபம் வந்தாலும் வந்து விடும். ஆகவே நான் உடம்பை பார்த்துக் கொள். கடவுளை நம்பு என்று சொன்னேன்'' என்று சஞ்சீவ் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?
மேலும் விஜய் கட்சி ஆரம்பித்த பின்பு பத்திரிகையாளர்களையே சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கரூர் சம்பவம் நடந்த உடன் கூட அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் போனார். விஜய்க்கு பத்திரிகையாளர்களை கண்டு பயமா? என்று ஒரு சினிமா விழாவில் சஞ்சீவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''ஏன் அண்ணா.. அவருக்கு என்ன பயம். சரியான நேரம் வரும்போது பண்ணுவாராக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
