குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் கொடூரமாக அடித்து கொலை; உரிமையாளர் உள்பட மூவர் கைது...
மதுரையில் உள்ள குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை கொடூரமாக அடித்தே கொன்ற மையத்தின் உரிமையாளர் உள்பட மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். கணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின்பேரில் இந்த உண்மை வெளிவந்தது.
மதுரை
மதுரையில் உள்ள குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை கொடூரமாக அடித்தே கொன்ற மையத்தின் உரிமையாளர் உள்பட மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். கணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின்பேரில் இந்த உண்மை வெளிவந்தது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர் நேவீஸ்பிரிட்டோ லூர்து ராஜ் (36). இவர் தஞ்சையில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் வேலைப் பார்த்துவந்தார். இவரது மனைவி விக்டோரியன் ராணி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த நேவீஸ்பிரிட்டோ லூர்து ராஜ் சிகிச்சைக்காக மதுரை கலைநகரில் உள்ள குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் கடந்த 7–ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேவீஸ்பிரிட்டோ லூர்து ராஜ் அங்கு திடீரென உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என்று அவரது மனைவி விக்டோரியன் ராணிக்கு தகவல் கிடைத்தது.
பதற்றத்தோடு அங்கு சென்று கணவரைப் பார்த்தபோது அவரது உடலில் அதிகளவில் காயங்கள் இருப்பதைப் பார்த்தார். இதில் அதிர்ச்சியடைந்தார் விக்டோரியன் ராணி. பின்னர், அவர் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்புகாரின்பேரில் ஆய்வாளர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர் காசி மற்றும் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அதில், "குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெறும் செல்லூர் சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (26) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து நேவீஸ்பிரிட்டோ லூர்து ராஜை கொடூரமாக அடித்து கொன்றுவிட்டனர் என்பது தெரியவந்தது.
மேலும், இந்தக் கொலைச் சம்பவம் வெளியேத் தெரிந்தால் பிரச்சனைகள் வரும் என்பதால் அம்மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் (36) கொலைக்கான அனைத்துத் தடயங்களையும் அதாவது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
"நேவீஸ்பிரிட்டோ லூர்து ராஜ் மையத்தில் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தாராம். இது பிடிக்காத ரமேஷ் மற்றும் 14 வயது சிறுவன் ஆத்திரத்தில் நேவீஸ்பிரிட்டோ லூர்து ராஜை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை வெளியே சிகிச்சைக்கு கொண்டுச் சென்றால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று அவருக்கு சிகிச்சைக்கு தராமல் உள்ளேயே வைத்துள்ளார். சிகிச்சையின்றி கிடந்த நேவீஸ்பிரிட்டோ லூர்து ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்" என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து கார்த்திகேயன், ரமேஷ் மற்றும் 14 வயது சிறுவன் என மூவரையும் கைது செய்தனர்.