TN education : தமிழகத்தில் தரமான கல்வி இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Governor vs TN government on education : தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போடுவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை விமர்சிப்பது, அரசு கல்லூரி நிகழ்வில் ஆர்எஸ்எஸ் கருத்துகளை பரப்புவது என செயல்படுவதாக குற்றச்சாட்டப்படுகிறது.
தமிழக கல்வி ஆளுநர் ரவி விமர்சனம்
இந்த நிலையில் தமிழகத்தில் கல்வி தரமாக இல்லையென ஆளுநர் ரவி விமர்சித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் என்றாலே கல்வி, அறிவு, திறமை என்று நாடு முழுவதும் பெருமையாக பேசப்படும் ஒன்று. அந்தக் கல்வித்தரத்தை குறைத்து மதிப்பிட்டு, “தமிழகத்தில் தரமான கல்வி இல்லை” என்று கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களின் கருத்து, மாணவர்களின் உழைப்பையும், தமிழகம் கட்டியெழுப்பிய, கல்வி மரபையும் அவமதிக்கிறது.
கிராமம் முதல் மாநகரம் வரைக் கல்விக்கான அணுகல் வசதியில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. தொடக்கக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை தரத்திலும், மாணவர்களின் சாதனைகளிலும், நாடு முழுவதும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இன்று, தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து மருத்துவக் கல்வியில், தமிழகமே நாடு முழுவதும் முன்னணியில் உள்ளது. 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பொறியாளர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவின் பெருமையை உயர்த்துகின்றனர். உலகத் தரம் வாய்ந்த IIT, NIT, IIM, Anna University, CMC போன்ற கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அதோடு, பிற மாநில மாணவ மாணவிகளும், தமிழ்நாட்டில் கல்வி கற்க, அதிக விருப்பம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ரவி மன்னிப்பு கேட்கனும்- வேல்முருகன்
போட்டித் தேர்வுகளில், ஆராய்ச்சித் துறைகளில், ஐ.டி. நிறுவனங்களில், இன்றுத் தமிழக மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் கல்வி கற்றவர்கள், தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறார்கள். இந்த நிலையில், தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை இழிவுபடுத்தும் வகையில், ஆளுநர் கூறிய இந்தக் கருத்து, அரசியல் நோக்கத்துடன் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டை குறை சொல்லும் அநியாய முயற்சிதான். ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் இந்தக் கருத்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே அவமானப்படுத்துகிறது. இது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் ஆபத்தான நிலைப்பாடு. ஆளுநரின் இந்த நிலைப்பாட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆளுநர் ஆர் .என்.ரவி அவர்கள், உடனடியாகத் தனது கருத்தைத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு அரசு மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், மத்திய அரசு அவரைக் கட்டுப்படுத்தி, அவர் தனது பதவியின் எல்லைகளை மீறாமல் இருக்க செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டின் கல்வியைக் குறைத்து மதிப்பிடும் எந்த முயற்சியும், தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பை சந்திக்கும் என்பதை , தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது. தமிழகத்தின் கல்வி, தமிழர்களின் உயிர் மூச்சு. அதை, யாராலும் இழிவுபடுத்த முடியாது.
