கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுமி... தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம்!
கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 7 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுவை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 7 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுவை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லா வறுமையால் இருந்ததால் வீட்டில் கழிப்பறை வசதிக்கூட இல்லாமல் இருந்தனர். அதனால் குடும்பத்தினர் திறந்தவெளி கழிப்படத்தில் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
இதனையடுத்து ஹனீபாஜாரா கழிப்பறை கட்டித்தர சொல்லி தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றால் கழிப்பறை கட்டித்தருவதாக தந்தை கூறினார். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை. கழிவறை கட்டும்படி தந்தையிடம் தொடர்ந்து போராடி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டில் கழிப்பறை கட்டி தருவதாக கூறி காலம் கடத்துவதாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசார் ஆம்பூர் நகராட்சி சுகாதார பிரிவினருக்கு தகவல் தெரிவித்து அழைத்துப் பேசினர்.
இந்நிலையில் இதுகுறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் மாணவியின் வீட்டின் பின்புறம் ஆம்பூர் நகராட்சி சார்பாக தூய்மை இந்தியா கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டும் பணி நேற்று தொடங்கியது. சிறுமியின் கழிப்பறை போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மேலும், மாணவியின் செயலை பாராட்டி ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதுவராக மாணவி ஹனிபா ஜாரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.